தனது வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று திமுக எம்.பி., திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. காலனியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைப்பதற்காக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை காலை வருகை தந்தார். அப்போது, திறப்பு விழா அழைப்பிதழ், பேனர் மற்றும் கல்வெட்டுகளில், திருச்சி சிவா எம்.பி., பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவின் காரை வழிமறித்து கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், அமைச்சரும் அவருடன் சென்றவர்களும் கார்களை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இறகுப் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா முடிந்து, அமைச்சர் புறப்பட்டு சென்றதும், அவரோடு வந்த ஆதரவாளர்கள் எம்.பி., சிவாவின் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த கார் மற்றும் வீட்டுக் கதவு, ஜன்னல் கண்ணாடிகள், சேர்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டனர்.
திருச்சியில் தி.மு.க., எம்.பி., ஆதரவாளர்களும், திமுக அமைச்சரின் ஆதரவாளர்களும் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தாக்குதல் நடந்தபோது எம்.பி., சிவா அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்தார்.
இந்நிலையில், வெளிநாட்டு பயணங்களை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இன்று திருச்சி சிவா எம்.பி., தனது வீடு திரும்பினார். அப்போது, நேருவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட தமது வீட்டையும் வாகனத்தையும் கண்டு வேதனைப்பட்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் தனி நபர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழுவுடன், 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன். என் வீட்டில் நடந்த தாக்குதல் குறித்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை, கடந்த காலத்திலும் இதுபோன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன்.
எனக்கு, என்னைவிட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால் அதையெல்லாம் நான் பெரிதுபடுத்தியதில்லை, யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான, அழுத்தமான திமுக கட்சிக்காரன். தனிமனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவத்தில் அடிப்படையில் வளர்ந்தவன், இருப்பவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்பொழுது நடந்திருக்கிற நிகழ்ச்சி மிகுந்த மனவேதனை தந்திருக்கின்றது. வீட்டில் உள்ள உதவியாளர்களிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது, அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி மற்றும் எனது நண்பர்கள் வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் காயப்பட்டு உள்ளனர். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது, ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை. மன சோர்வில் உள்ளேன். மனச் சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தியது இல்லை. இந்த தாக்குதல் சம்பவம் எனக்கு பெரும் வேதனையை தந்துள்ளது, பிறகு முழு விபரமாக உங்களை சந்திக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.
சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டுக்கு உங்களது பதில் என்ன? என்ற கேள்விக்கு, எந்த பதிலும் அளிக்காமல் திருச்சி சிவா எம்.பி. சென்றுவிட்டார். பின்னர், திருச்சி தில்லை நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது ஆதரவாளர் சரவணன் என்பவரை திருச்சி சிவா எம்.பி. நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நேற்று அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் சரவணன் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடதக்கது.