கோயம்புத்தூரில் பள்ளிக்கட்டணத்திற்கே வழியின்றி பூ விற்ற குழந்தைகளுக்கு திமுக எம்.பி செந்தில்குமார் ரூ.1 லட்சத்திற்கு மேல் நிதி திரட்டிக்கொடுத்தார்.
கோயம்புத்தூர் அருகே மருதமலை சாலையில் சபீர் என்பவர் பள்ளிச்சிறுவர்களான தனது மகன் தன்வீர் மற்றும் மகள் ஜோயாவுடன் பூ விற்பனை செய்துகொண்டிருந்தார். தந்தை சாலையோரம் அமர்ந்தபடி பூக்களை பைகளை நிரப்பிக்கொடுக்க, குழந்தைகள் இருவரும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிம் அதை கூவி வித்தனர்.
தங்கள் வயிற்றுப் பசியை போக்கிக்கொள்வதற்காக பூக்களை விற்பதாகவும், வேறு வழியின்றி குழந்தைகளை அழைத்து வந்துவிட்டதாகவும் கவலையுடன் சபீர் தெரிவித்திருந்தார். அத்துடன் ஆன்லைனில் வகுப்புகள் நடப்பதாகவும், கல்விக்கட்டணம் செலுத்த வழி தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். இந்த தகவல் செய்தியாக ஊடகங்களில் வெளியாகின.
இதையடுத்து தருமபுரி திமுக எம்பி செந்தில் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த சிறுவர்களின் படிப்புக்காக பெற்றோருடைய வங்கிக் கணக்கில் தலா ஆயிரம் செலுத்துமாறு நிதி திரட்டினார். அவரது கோரிக்கையை ஏற்று பலர் தலா ஆயிரம் செலுத்தினர். ரூ.80 ஆயிரம் இலக்காக வைத்து அவர் நிதி திரட்ட, ரூ.1 லட்சத்திற்கும் மேல் நிதி திரண்டுவிட்டதாக, செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.