திமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்?

திமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்?

திமுக எம்எல்ஏ-வை பணத்துடன் சிறைபிடித்த நாங்குநேரி மக்கள்?
Published on

நாங்குநேரியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 2.78 லட்சம் ரூபாய், ‌வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இடைத்தேர்தல் என்றாலே பணப்பட்டுவாடா புகார்கள் வருவதும், சோதனையில் கட்டுக்கட்டாக பணம் சிக்குவதும் வாடிக்கையாகிவிட்டது. வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி தொகுதியும் இதற்கு விதிவிலக்கல்ல.

வழக்கமாக ஒரு கட்சியினர் பணப்பட்டுவாடா‌ செய்வதை, மற்ற கட்சியினர் ரகசியமாக புகார் அளிப்பதை தான் பார்த்திருப்போம். ஆனால், நாங்குநேரியில் பணப்பட்டுவாடா குறித்து மக்களே புகார் அளித்து‌ள்ளனர். பட்டியலினத்தில் உள்ள 7 உட்பிரிவுகளைச் சேர்த்து தேவேந்திரகுல வேளாளராக ‌அறிவிக்கக் கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் சிலர் பணப்பட்டுவாடா குறித்து புகார் அளித்தனர்.

நாங்குநேரி தொகுதியில் உள்ள மூலக்கரைப்பட்டி அருகே அம்பலம் கிராமத்தில் ஒரு வீட்டை திமுக-வினர் வாடகைக்கு எடுத்ததாகவும், மேலும், பணப்பட்டுவாடா செய்யும் வகையில், வாக்காளர் பட்டியலை தயார் செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது, பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட திமுகவினரை அப்பகுதி மக்கள் பணத்துடன் சிறைபிடித்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேர்தல் பறக்கும் படையினர், வீட்டின் முன் சிதறிக் கிடந்த 2.78 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். வீட்டிலிருந்த 7 பேரில் இருவர் தப்பியோடிவிட்டதாக கூறப்படும் நிலையில், 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வீடு மற்றும் கார்களில் பணம் இருப்பதாக மக்கள் கொடுத்த தகவலின் பேரில், வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனிடையே, நாங்குநேரி திமுக ஒன்றியச் செயலாளர் சுடலைக்கண்ணு மூலைகரைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தேர்தல் பணிக்காக வீடு எடுத்து தங்கியிருந்த எம்எல்ஏ சரவணகுமார் உள்ளிட்ட 7 பேரை அந்த பகுதியைச் சேர்ந்த‌ 20-க்கும் மேற்பட்டோர் தாக்கி, செலவுக்காக வைத்திருந்த பணத்தை பறித்து சென்றதாக குற்றம்சாட்டியுள்ளார். இருதரப்பு புகார் குறித்தும் காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com