திடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ. பூங்கோதை குணமடைந்து வீடு திரும்பினார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான பூங்கோதை ஆலடி அருணாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆலங்குளம் அருகே உள்ள சிவலார்குளம் விலக்கில் உள்ள அவரது வீட்டில் சுயநினைவு இல்லாத நிலையில் இருந்த அவரை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்றதாக செய்தி வெளியானது. ஆனால் அச்செய்தி முற்றிலும் தவறானது என அவரே விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது தான் ஓரளவு குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக பூங்கோதை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
''நன்றி! உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நான் ஓரளவு குணமடைந்து வீடு திரும்பியுள்ளேன். மருத்துவர்கள் இன்னும் சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார்கள். என் மீது அன்பும் அக்கறையும் வைத்து நலம் விசாரித்து அனைவருக்கும் நன்றி.
முக்கியமாக பாசத்தோடு தொலைபேசி வாயிலாக என் நலம் விசாரித்த தலைவர் ஸ்டாலின், அண்ணியார், செல்வி அண்ணியார், பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன், முதன்மை செயலாளர் அண்ணன் நேரு, துணை பொதுசெயலாளர் ஆ. ராசா, மகளிர் அணி தலைவர் கனிமொழி ஆகியோர்க்கு என் நன்றிகள் .
விரைவில் உடல் நலம் தேறி கட்சிப் பணியில் இன்னும் துரிதமாக செயல்படுவேன். 2021 திமுக ஆட்சியே லட்சியம்; ஸ்டாலின் முதல்வராவது நிச்சயம்.''
இவ்வாறு பூங்கோதை குறிப்பிட்டுள்ளார்.