துப்பாக்கிச்சூடு விவகாரம் : திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன்

துப்பாக்கிச்சூடு விவகாரம் : திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன்
துப்பாக்கிச்சூடு விவகாரம் : திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன்
Published on

துப்பாக்கிச்சூடு வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதிக்கும் இமயம்குமார் தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார். இதையடுத்து, அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று படுகாயம் அடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்டோர் மீது திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இதயவர்மன் உள்ளிட்டோரை கைது செய்தனர். இதயவர்மன் உள்ளிட்டோரின் ஜாமீன் மனுக்களை காஞ்சிபுரம் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, இதயவர்மன் உள்பட 11 பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவில், சம்பவம் நடந்த போது தாங்கள் அங்கு இல்லை எனவும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜன், உரிமம் காலவதியான துப்பாக்கி கொண்டு இதயவர்மன் சுட்டதாக தெரிவித்தார். மேலும், இதயவர்மனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எம்.எல்.ஏ இதயவர்மன் தோட்டாக்கள் உற்பத்தி செய்தாரா என்பது குறித்தும் அவருக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதுபோல் கிராம மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நபர்களை ஏன் அந்த கிராமத்தை விட்டு வெளியேற்ற கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காவல்துறைனரின் விசாரணை ஆவணங்கள், துப்பாக்கி சூட்டில் காயமடைந்தோரின் மருத்துவ அறிக்கைகள் என அனைத்தையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இதயவர்மன் உள்ளிட்ட 11 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தினந்தோறும் காலை, மாலை கையெழுத்திட வேண்டும் எனவும் மறு உத்தரவு வரும் வரை இதை கடைபிடிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

’வழக்கில் தொடர்புடைய வேறு சிலருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது மற்றும் துப்பாக்கி சூடுக்குள்ளானவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது ஆகியவற்றின் அடிப்படையில் 11 பேருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்குகிறேன்’ என்று நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com