சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்று நீதிமன்றத்தையே குழப்பிய டிடிவி தினகரன், இப்போது எந்த நாட்டு பிரஜையாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை விமர்சிக்கும் அறிக்கையை வெளியிட்டார் என திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியையும், மறைந்த ஜெயலலிதாவின் போயஸ் கார்டனையும் அபகரித்து அதிமுகவிலும், போயஸ் கார்டனிலும் டி.டி.வி. தினகரன் இடம் பிடித்திருப்பதாக விமர்சித்துள்ளார். அவருக்கு திமுக செயல் தலைவர் பற்றி அறிக்கை விட எந்தத் தகுதியுமே இல்லை என்று விமர்சித்துள்ள துரை.சந்திரசேகரன், அதிமுகவிற்குள் ஆக்கிரமித்த இடத்தை ஸ்டாலினை விமர்சித்தாவது தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்று நினைத்துக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை குற்றவாளி கூண்டில் நிறுத்தியதே தினகரன் குடும்பத்தினர்தான் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அந்நிய செலவாணி மோசடி வழக்கில், தான் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவர் என்று நீதிமன்றத்தையே குழப்பிய டிடிவி தினகரன், இப்போது எந்த நாட்டு பிரஜையாக இந்த அறிக்கையை விட்டுள்ளார் என்பதை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் துரை.சந்திரசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார். அரசியலுக்கும் தினகரனுக்கும் வெகுதூரம் என்றும், இது போன்ற அறிக்கைகளை வெளியிட்டு ஸ்டாலினிடம் விபரீத விளையாட்டு வேண்டாம் என்றும் துரை. சந்திரசேகரன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.