‘பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாஜகவினர்’ - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்

‘பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாஜகவினர்’ - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்
‘பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாஜகவினர்’ - அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சனம்
Published on

பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர்தான் என்றும், திமுகவை எந்தப் பொய்யினாலும் தகர்க்க முடியாது எனவும் தமிழக தகவல் தொழல்நுட்பவியல் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். பின்னர் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் மாநில அரசு சார்பில் தொலைக்காட்சி ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்துள்ளது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மாநிலத்தின் அதிகாரங்களை பிடுங்கி, மாநில சுயாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்தியில் அதிகார குவியல் இருப்பதால், பல வழிகளில் மாநில உரிமையை பறிக்க முயற்சி செய்து வருகிறது மத்திய அரசு. இதை திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

மாநிலங்களுக்கான அதிகாரத்தை அதிகமாக வழங்க வேண்டும் என்பது அனைத்து மாநிலங்களின் கோரிக்கை. இதனை மீறும் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக முதல்வரிடம் பேசி இதற்கான முழுமையான நடவடிக்கை மேற்கொள்வோம். தமிழகத்தில் வால், மூக்கு, தலையை நுழைப்பேன் என்று தமிழிசை கூறுகிறார். நாங்கள் கூறுவது உடலையே நுழையுங்கள், ஆனால் இது எதுவும் எடுபடாது. அவர்களது சங்கம் கலைந்து கொண்டு இருக்கிறது, அந்த விரக்தியின் வெளிப்பாடாக பார்க்கிறேன்.

அன்பு, அறன் என்ற சொல்லுக்கு நேர் எதிர்மறை சொல்லான வெறுப்பு என்பதை பேசுகின்றவர்கள் பாஜக கட்சியினர். ஆன்மீகங்களுக்கும் அவர்களுக்கு சம்பந்தமில்லை. மாற்று மதங்களை கொச்சைப்படுத்தி இழிவுப்படுத்தும் செயல் ஆன்மீகம் ஆகாது. ஆளுநர் பதவி வேண்டுமா, வேண்டாமா என்னும் சர்ச்சை நடந்து வருகிறது. எப்போதுமே ஆளுநர் பதவி தலைவலியாக இருந்து வருகிறது.

பன்வாரிலால் தலைமையில் அப்போதைய ஆட்சியில் துணைவேந்தர்கள் பதவி வழங்கப்பட்டது. சாத்தான் வேதம் ஓதுவது போன்று, அவர் தற்போது பேசுகிறார். அவரது பதவி காலத்தில் அப்போதைய அரசுக்கு வக்காலத்து வாங்கும் பணியை செய்தார். பொய் மூட்டையில் சவாரி செய்பவர்கள் பாரதிய ஜனதா கட்சியினர், திமுக வை எந்த பொய்யினாலும் தகர்க்க முடியாது” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com