“தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மிகவும் கைராசிக்காரர். கர்நாடகாவில் தமிழர்களின் 80,000 வாக்குகளுக்களை கைப்பற்ற பணியாற்றி, வெறும் 10 வாக்குகள் பெற்று தந்துள்ளார்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிண்டல் செய்துள்ளார்.
சென்னை மதுரவாயல் அருகே போருரில் திமுக ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. மதுரவாயல் எம்.எல்.ஏ. காரம்பாக்கம் கணபதி தலைமையில் நடந்த அக்கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ரூ.500-1000 செல்லாது என்ற அறிவித்தபோது பணத்தை மாற்றி பெற மக்கள் பட்ட அவதிகள் எண்ணற்றவை. மக்கள் இன்னும் அந்த மனநிலையில் இருந்தே வெளிவரவில்லை. அதற்குள் மோடி அரசு இந்த 2000 ரூபாய் செல்லாது என்ற கோமாளித்தனமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதற்கான முக்கிய காரணம் சமூகவலைகளத்தில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் கர்நாடக பாஜக தோல்வி.
கர்நாடக தேர்தல் தோல்வி அவமானத்தை மறைக்க பாஜக அரசு 2000 ரூபாய் செல்லாது என பொருத்தமற்ற அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் 80,000 தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களின் தொகுதிகளில், அனைத்து வாக்குகளையும் பாஜக பெற வேண்டும் என்ற காரணத்தில் தமிழகத்தின் ‘வீராதி வீரர், சூராதி சூரர்’ அண்ணாமலை அங்கு தேர்தல் களப்பணி மேற்கொண்டார். ஆனால் அங்கு வெறும் பத்து ஓட்டுதான் பாஜக பெற்றது. அண்ணாமலை கைராசிக்காரர்” என கிண்டல் செய்தார்.
மேலும் “கர்நாடகத்தில் பாஜகவின் தோல்வி அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி. இது திமுகவிற்கு எழுச்சி” என்றும் கூறினார்.