தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குசேகரிப்பின் கடைசி நாளான நேற்று, பெரம்பலூர் தொகுதியில் வானொலி திடலில் இருந்து திமுக வேட்பாளர் அருண்நேருவிற்கு ஆதரவாக நேற்று அக்கட்சியினர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.
அப்போது, சுயேச்சை வேட்பாளர் ரெங்கராஜ் என்பவரும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். வழியில் திமுகவினர் பேரணியாக சென்றதால் சுயேச்சை வேட்பாளர் தரப்பில் வழிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதனால் சுயேச்சை வேட்பாளரின் ஆதரவாளர்களுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதில் ரெங்கராஜ் ஆதரவாளர்களை அடிக்கச்சென்ற திமுகவினரை, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் ஒருசிலர் சுயேச்சை வேட்பாளரை தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னையை முடித்துவைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த தாக்குதலில் சுயேச்சை வேட்பாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல புதுக்கோட்டையில் அதிமுக - திமுகவினர் ஒரேநேரத்தில் வாக்கு சேகரிக்க முயன்றபோது ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.