இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை அரசியல் சட்டத்தை காலில் போட்டு மிதித்து, அதன் மீது ஏறி நின்று, சிறிதும் மனசாட்சி இன்றி நாடாளுமன்றத்தை சிறிசேன கலைத்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் தமிழர்களின் வாழ்வுக்கு சிறிசேன அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறும் ஜனநாயக விரோத செயல்களை தொடக்கம் முதலே மத்திய அரசு கைகட்டி வேடிக்கை பார்ப்பது கவலை அளிப்ப தாக அவர் கூறியுள்ளார். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடந்துள்ள மிகப்பெரிய அநியாயத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கண்டு காணாமல் இருப்பதைக் கண்டு உலகத்தமிழர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயிருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும், கண்ணியத்துடனும் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.