அரசியல் பார்வைகள், கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு மக்களைக் காப்பாற்ற அரசுக்கு ஒத்துழைப்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு 15 நாட்கள் கடந்துவிட்டன. பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு முடிவுக்கு வருமா அல்லது மேலும் தொடருமா என்ற தவிப்பில், தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள மக்கள் இருக்கிறார்கள். கொரோனா நோய்த்தொற்றிலிருந்து 130 கோடிக்கும் அதிகமான இந்திய மக்களைக் காப்பதற்காக ஊரடங்கை நீடிக்க வேண்டியது குறித்து அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து, பிரதமர் அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டபோது, கொரோனா நோய்த்தொற்றினைத் தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் அனைத்திற்கும் திராவிட முன்னேற்றக் கழகம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனவும் நோய்த்தொற்றினைத் தடுப்பதற்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கிட வேண்டும் என்பதையும் பிரதமரிடம் வலியுறுத்தினேன்.
ஏப்ரல் 8-ம் தேதியன்று பிரதமர் காணொளி வாயிலாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர்.பாலு மாநிலத்தின் நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் - தமிழக ஆளுங்கட்சியின் முதல்வர், மத்திய அரசிடம் கோரிக்கை வைத்த 9 ஆயிரம் கோடி ரூபாயை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அதுபோலவே, இதுவரை நிதி ஒதுக்கப்படாத புதுச்சேரிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார்.
நாடாளுமன்ற மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டாண்டு காலத்திற்கு நிறுத்தி வைத்து, அந்தத் தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானது. மக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அல்லும் பகலும் செயலாற்றுகின்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரின் ஈடுபாட்டையும் தி.மு.கழகம் இதயமாரப் பாராட்டிப் போற்றுகின்றது.
மக்களின் உயிர்தான் முதன்மையானது; அரசியல் பார்வைகள் - கருத்து வேறுபாடுகள் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, கொரோனா நோய்த்தொற்றிலிருந்து மக்களைக் காப்பதற்கான தலையாய பணியில் அரசுகளுக்கு ஒத்துழைப்போம். களத்தில் நம் பணிகளைத் தொடர்ந்திடுவோம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.