ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு இனியாவது திருந்தி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின்,
“ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையையும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளையும் உதாசீனப்படுத்திய முதலமைச்சர் இனியாவது
திருந்தி கொள்கை முடிவெடுக்க வேண்டும். மேல்முறையீடு செய்வோம் என்று வழக்கமான பல்லவியை பாடாமல், ஸ்டெர்லைட்
ஆலையை நிரந்தரமாக மூட முடிவெடுங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக இன்று, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது. ஆலை மீண்டும்
இயங்க தடையில்லை என்றும் மூன்று வாரத்திற்குள் ஆலை இயங்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பாணை
வெளியிடவும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆலைக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது.
இதேபோல் ஸ்டெர்லைட் ஆலைக்கும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆலையை சுற்றியுள்ள மக்களின் மேம்பாட்டுக்காக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை 100 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மத்திய,
மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்களின் விதிமுறைகள் மற்றும் தருண் அகர்வாலா குழு பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என்று
அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாசு குறித்த விவரங்களை மாதம் ஒருமுறை இணையதளத்தில் பதிவிட வேண்டும் என்றும் அந்த
விவரங்களை மாநில மற்றும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்துடன் பகிர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தரவுகளை தரவில்லை என்றால் பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பன போன்ற நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை
பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆலைக்கு எதிராக தமிழக அரசு முன்வைத்த வாதங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஸ்டெர்லைட்
ஆலைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது.