"பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இப்போது என்ன அவசரம்?" - மு.க.ஸ்டாலின் கேள்வி

"பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இப்போது என்ன அவசரம்?" - மு.க.ஸ்டாலின் கேள்வி
"பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இப்போது என்ன அவசரம்?" - மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

பத்தாம் வகுப்புத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதனையடுத்து மேலும் தொடர்வது குறித்த அறிவிப்பை இன்று பிரதமர் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஜூன் 1-ம் தேதி முதல் பத்தாம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா தொற்றினால் பீதியும் அச்சமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அவசர அறிவிப்பு, மாணவ - மாணவியர் மற்றும் அவர்தம் பெற்றோர் மனதில் மேலும் பதற்றத்தை உருவாக்கவே செய்யும் என மு.க. ஸ்டாலின் தன் அறிக்கையில் சுட்டுக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் மனநிலையைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், திடீரென தன்னிச்சையாக இப்படி ஒரு முடிவை அரசு எடுத்துள்ளது. வாரந்தோறும் பிரதமரே அனைத்து மாநில முதல்வர்களுடனும் கலந்தாலோசனை செய்து முடிவுகள் எடுக்கும் போது, இத்தேர்வுத் தேதிகளை யாரைக் கேட்டு தமிழக அரசு முடிவு செய்கிறது? ஆசிரியர் - பெற்றோர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துக் கேட்டு, பரிசீலனை செய்யப்பட்டதா?

மே17-ம் தேதி வரை ஊரடங்கு நடைமுறையில் இருக்கிறது. ஊரடங்கு நீடிக்குமா இல்லையா என்பதை அரசு இன்னமும் இறுதி முடிவு செய்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் தேர்வுத் தேதியை அறிவிக்க என்ன அவசரம், என்ன அவசியம்?

சென்னையில் கொரோனா பாதிப்பு குறையாமல், பெருகி வருவதால், தமிழகத்தில் விமானம் மற்றும் இரயில் போக்குவரத்தை மே 31-ம் தேதி வரை அனுமதிக்க வேண்டாம் என்று பிரதமரிடம் தமிழக முதல்வர் கோரிக்கை வைத்துள்ளார். மே 31-ம் தேதி வரை ரயில்கள் ஓடாது என்றால், போக்கு வரத்து வசதிக்கு உத்தரவாதம் இன்றி, ஜூன் 1-ம் தேதி காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வுக்கு எப்படி வருவார்கள்? மாணவர்கள் எத்தனை பேர் வெளியூர்களில் இருக்கிறார்கள் எனத் தெரியாது. இந்நிலையில் எதற்காக இத்தகைய குழப்பமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்து, மருத்துவ ரீதியான இயல்பு வாழ்க்கை திரும்பியதாக உறுதிப்படுத்திய பிறகு, தேர்வு நடத்துவதே சரியானது; முறையானது. தேவையான கால இடைவெளி கொடுத்து, மாணவர்களையும் பெற்றோரையும் ஆசிரியர்களையும் மனரீதியாகத் தயார் செய்த பிறகு, தேர்வுத் தேதியை அறிவிப்பதே சரியாக இருக்கும். நெருக்கடி மிகுந்திருக்கும் இந்த காலக்கட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தன் பங்குக்குக் குழப்பத்தை அதிகப்படுத்துவது நியாயமல்ல” என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com