திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை, வாலாஜா சாலை வழியாக இறுதி ஊர்வலம் அண்ணா சதுக்கம் சென்று கொண்டிருக்கிறது. அவரது உடலை சுற்றி திமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். கண்ணீர் கடலில் கருணாநிதி, அண்ணாவைக் காண புறப்பட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக அவர் பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலியின் புகைப்படம் தற்போது, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்தப் புகைப்படத்தை பகிரும் தொண்டர்கள், உருக்கமான வரிகளை பகிர்ந்து வருகின்றனர். கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக நடப்பதை நிறுத்திவிட்டார். அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் என எங்கும் கருணாநிதியுடன் கூடவே பயணித்தது, அந்தத் தானியங்கி இருக்கை. இப்போது "தலைவர் இல்லாத இருக்கை இனி எங்கே தனியே பயணிக்கும்" என திமுக தொண்டர்கள் உருக்கமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கருணாநிதியின் மறைவு தமிழகம் மட்டுமின்றி, சமூக வலைத்தளங்களையும் இந்திய அளவில் கலங்க வைத்துள்ளது.