திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொதுத் தொகுதிகள் மட்டுமல்லாமல், தனித்தொகுதிகளிலும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளன.
தமிழகத்தில் உள்ள 46 தனித்தொகுதிகளில் திமுக கூட்டணி கடந்த தேர்தலில் வெறும் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதிமுக 32 இடங்களை வசப்படுத்தியது. அப்போது திமுக கூட்டணயில் விசிக, இடதுசாரிகள் இடம்பெறவில்லை. ஆனால் இந்த முறை திமுக கூட்டணி 29 தனி தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. அதில் திமுக எம்எல்ஏக்கள் 22 பேர். விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு தனித் தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தனித் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த முறை அதிமுக கூட்டணியால் 17 தனித் தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
வடக்கு, மத்திய மற்றும் தெற்கு மண்டங்களில் உள்ள தனித் தொகுதிகளில் திமுக அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. மேற்கு மண்டலத்தில் இரண்டு தனி தொகுதிகளை திமுக கைப்பற்றியுள்ளது. ராசிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மதிவேந்தன், அதிமுக அமைச்சர் வி.சரோஜாவை வீழ்த்தினார். பத்து ஆண்டுகளுக்கு பிறகு, சேந்தமங்கலம் தொகுதியில் திமுக வெற்று பெற்றுள்ளது. திமுக வேட்பாளர் பொன்னுசாமி, அதிமுக வேட்பாளர் சந்திரனை தோற்கடித்தார். அதற்கு சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்ட அதிமுக எம்.எல்.ஏ சி.சந்திரசேகரன் 11 ஆயிரம் வாக்குகள் பெற்றதும் ஒரு காரணம்.
காங்கிரஸ் போட்டியிட்ட இரண்டு தனித் தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகையும், பொன்னேரியில் துரை சந்திரசேகரும் வெற்றி பெற்றுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, செய்யூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய தனித் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. திமுக தனி தொகுதிகளில் அதிக அளவில் வெற்றி பெற்றதற்கு விசிக, இடதுசாரிகள் கூட்டணியில் அங்கம் வகித்ததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பட்டியலின மக்களின் வாக்குகளை கவரும் வகையிலான கட்சிகள் இல்லாததே தனி தொகுதியில் பிரகாசிக்க முடியாததற்கான காரணமாக கூறப்படுகிறது.