திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உயிரிழந்த நிலையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
திமுகவின் பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இரவு 8 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு விரைந்து அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டபோது, க.அன்பழகனுக்கு சிகிச்சை பலன் தராத நிலையே உள்ளதாக கூறினார். இதனையடுத்து, அப்போலோ மருத்துவமனை முன்பு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். இதனிடையே நள்ளிரவு 1 மணியளவில் க.அன்பழகன் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியது.
இதனையடுத்து மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த க.அன்பழகன் உடலுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து 2.20 மணியளவில் க.அன்பழகனின் உடலில் திமுகவின் கருப்பு, சிகப்பு நிற கொடி போர்த்தப்பட்டு வாகனம் மூலம், கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சுமார் 40 நிமிடங்கள் பயணத்திற்கு பின்னர் 3 மணிக்கு க.அன்பழகன் உடல் இருந்த வாகனம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு வந்து சேர்ந்தது. திமுக நிர்வாகிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அன்பழகனுக்கு இறுதியஞ்சலி செலுத்தி வருகின்றனர்.