திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது.
திமுக பொதுக்குழு, கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி கூடும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த நேரத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. அதன்படி ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடக்கிறது.
அண்மையில் நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் திமுக அணி தோல்வியடைந்தது. இதுபற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மேலும் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் பிற முக்கிய அம்சங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது