காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றிய திமுக நிர்வாகி, தலைமை உத்தரவையும் மீறி தனது பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதால் இழுபறி நீடிக்கிறது.
தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 19 வார்டுகளையும் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ் இரண்டு வார்டுகளையும், அமமுக இரண்டு வார்டுகளையும், அதிமுக 7 வார்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
1962 ஆம் ஆண்டு தேனி அல்லிநகரம் நகராட்சியாக உருவெடுத்த காலத்தில் இருந்து தற்போதுவரை நகராட்சித் தலைவர் பதவி திமுகவுக்கு கிடைக்காத நிலையில், தற்போது முதன்முறையாக திமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. எனவே தற்போதைய திமுக நகரச் செயலாளராக இருக்கும் பாலமுருகனின் மனைவி ரேணுப்ரியாதான் நகராட்சி தலைவர் வேட்பாளர் என்ற பேச்சு அடிபட்டது.
அதன்பின்னர், கூட்டணி பங்கீட்டு அடிப்படையில் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் சற்குணம் என்ற இருபத்தி இரண்டாவது வார்டில் இருந்து வெற்றி பெற்ற வேட்பாளர் நகராட்சித் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வேட்பு மனு தாக்கலின் போது காங்கிரஸ் வேட்பாளர் சற்குணத்தை வேட்புமனுத் தாக்கல் செய்ய விடாமல் திமுகவினர் தடுத்தனர். திமுக நகர செயலாளர் பாலமுருகனின் மனைவி ரேணுப்ரியா கட்சித் தலைமையின் அறிவிப்பையும் மீறி வேட்புமனு தாக்கல் செய்து நகராட்சி தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை திமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிலையில், தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைவர் பொறுப்பேற்றுள்ள அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த அறிக்கை வெளியிட்டு மூன்று நாட்களாகியும் தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ள ரேணுப்பிரியா நகராட்சித் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவில்லை. இதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் தோழமை கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி தலைவர்கள் சார்பில் தேனியில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, அனைத்துப் பேச்சுவார்த்தைகளிலும் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறி நகராட்சி தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள ரேணுப் பிரியா தனது பதவியை ராஜினாமா செய்வாரா அல்லது அவர் திமுகவில் இருந்து விலகி மாற்றுக் கட்சிக்கு சென்று நகராட்சி தலைவர் பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா என்ற குழப்பமான சூழல் தற்போது நிலவுகிறது.