செய்தியாளர் - ராஜ்குமார்
இன்னும் ஒருசில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி முதற்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திக்கிறது. 15 விருப்பமான தொகுதிகளுக்கான பட்டியல் காங்கிரஸ் கட்சி வழங்கி இருக்கிறது. இதில், 12 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையாக உளளது.
காங்கிரஸ் கட்சி தங்களது தொகுதிகளுக்கான எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதில் தீவிரம் காட்டுகின்றனர். அதற்காகத்தான் டெல்லியில் இருந்து முகுல் வாஸ்னிக், அஜோய் குமார் மற்றும் சல்மான் குர்சித் உள்ளிட்டோர்களும் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். அதேபோல் மக்கள் நீதி மய்யம், திமுக கூட்டணிக்கு வந்தால் அவர்களுக்கான தொகுதியை காங்கிரஸ் கட்சி உள் ஒதுக்கீடாக வழங்கவும் திட்டமிட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் 10 தொகுதிகளில் போட்டியிட்டதை சேர்த்து 15 தொகுதிகளுக்கான பட்டியலை காங்கிரஸ் கட்சி வழங்கி இருக்கிறது. அவை,
1.திருவள்ளூர் (SC)
2.கிருஷ்ணகிரி
3.ஆரணி
4.கரூர்
5.திருச்சிராப்பள்ளி
6.சிவகங்கை
7.தேனி ( தேனி தொகுதியில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மட்டும் தோல்வி)
8.விருதுநகர்
9.கன்னியாகுமரி
10.புதுச்சேரி.
11 திருநெல்வேலி
12 காஞ்சிபுரம்
13 தென்சென்னை
14 கள்ளக்குறிச்சி
15 மயிலாடுதுறை
மேற்கண்ட தொகுதிகளில், சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட தொகுதிகளை திமுக தரப்பில் ஒதுக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி கொடுத்திருக்கும் தொகுதிகள் பட்டியலில் பிற கூட்டணி கட்சியினர் கேட்கும் நிலை இருந்தால் வேறு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.
உதாரணத்திற்கு விருதுநகர் தொகுதியை மதிமுக கேட்கிறது. அதேபோல், கிருஷ்ணகிரி மற்றும் ஆரணி தொகுதியில் திமுக போட்டியிட நினைக்கிறது. கள்ளக்குறிச்சி தொகுதியை விசிக கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராமநாதபுரம், தென்காசி (SC), திண்டுக்கல், திருவண்ணாமலை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரக்கோணம் உள்ளிட்ட தொகுதிகளையும் தங்களுக்கு வேண்டுமென கூட்டணி கட்சிகள் வலியுறுத்துகின்றன.