கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்

கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்

கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - ஸ்டாலின்
Published on

கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷ வாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது தலைக்குனிவு என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கழிவுகளை அகற்றும் பணிகளின்போது விஷவாயு தாக்குவது, மண் சரிவது உள்ளிட்ட காரணங்களால் மனிதர்கள் இறப்பது தொடர்கதையாகவே உள்ளது. கடந்த 1993ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்தியாவில் கழிவுகளை அகற்றும் பணியின்போது மட்டும் 620 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் இந்த விவரத்தை சமீபத்தில் வெளியிட்டது.

இதன்படி கழிவுகளை அகற்றும் பணியின்போது அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. உயிரிழந்த 620 பேரில் 144 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தபடியாக குஜராத்தில் 131 பேரும், கர்நாடகாவில் 75 பேரும், உத்தரபிரதேசத்தில் 71 பேரும், ஹரியானாவில் 51 பேரும் உயிரிழந்துள்ளனர். ‌கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 88 பேர் உயிரிழந்துள்ளனர். இது 15 மாநிலங்களை சேர்ந்த தரவுகள் தான், அனைத்து மாநிலங்களின் தரவுகளும் கிடைத்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷ வாயு தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது தலைக்குனிவு என்று  ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக ஸ்டாலின் தனது ட்விட்டரில், “கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைக்குனிவு!

இதில் தி.மு.க. ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை! நவீனக் கருவிகள் உருவாக்கப்பட வேண்டும். மனித மாண்பு பேணப்பட, நாம் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டுமென அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com