அன்னியூர் சிவா அசத்தல் வெற்றி... 67,663 வாக்குகள் வித்தியாசம்- அதிமுக வாக்குகள் யாருக்குப் போனது?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர், அன்புமணியைவிட 67,663 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.
எடப்பாடி, ஸ்டாலின்
எடப்பாடி, ஸ்டாலின்புதிய தலைமுறை
Published on

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர், அன்புமணியைவிட 67,663 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இந்த வெற்றி குறித்து, திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின்,

இது, திமுக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய வெற்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக போட்டியிடாமல் புறக்கணித்த நிலையில் திமுக, பாமக, நாதக என மூன்று கட்சிகளும் அந்த வாக்குகளைக் குறிவைத்து காய்களை நகர்த்தின.

இந்தநிலையில், அதிமுகவின் வாக்குகள் யாருக்குப் போயிருக்கின்றன என்பது குறித்து பார்ப்போம்.

விக்கிரவாண்டி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி மரணமடைந்ததையொட்டி, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக, அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தன. இதனால், திமுக, பாமக, நாதக இடையிலான மும்முனைப் போட்டியாக களம் மாறியது.

தலைவர்கள்
தலைவர்கள்புதியதலைமுறை

யார் வெற்றிபெறுவது என்பதில் மட்டுமல்ல, அதிமுக போட்டியிடாத வேளையில், அதிமுகவின் வாக்குகளை யார் கைப்பற்றுவது என்பதிலும் மும்முனைப் போட்டி நிலவியது. காரணம், விக்கிரவாண்டி அதிமுகவுக்கு நல்ல வாக்குவங்கி உள்ள தொகுதி.

சமீபத்தில் நடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில்கூட இந்த விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் பெற்ற வாக்குகள் 65,365. வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக்கூடிய வாக்குகளாக அதிமுக வாக்குகள் மாறின. அதனால், இந்த வாக்குகளைப் பெற திமுக, பாமக, நாதக என மூன்று கட்சிகளும் முட்டி மோதின.

சீமான், நேரடியாகவே விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைகளில், அதிமுக, தேமுதிக தொண்டர்களிடமும் தலைவர்களிடமும் ஆதரவு கேட்டார். அதிமுக நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்தார். பாமகவோ, ஜெயலலிதா புகைப்படத்தைப் பயன்படுத்தி பிரசாரம் செய்தது. பாமக தலைவர் அன்புமணியும், திமுகவை வீழ்த்த எங்களுக்கு வாக்களிக்கவேண்டும் என அதிமுக தொண்டர்களிடம் கோரிக்கை விடுத்தார். திமுகவோ, அதிமுகவை பெரியளவில் விமர்சிக்காமல் தவிர்த்தது. தவிர, அமைச்சர் எ.வ.வேலுவும் எம்.ஜி.ஆரே திமுகவில் இருந்தவர்தான். அதனால், திராவிடக் கட்சியான திமுகவுக்குத்தான் அதிமுகவினர் வாக்களிப்பார்கள் என்றார்.

இந்தநிலையில் கடந்த பத்தாம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் ஒட்டுமொத்தமாக, 82.48 சதவிகித வாக்குகள் பதிவாகின. இன்று வாக்குப்பதிவு தொடங்கியது, முதல் சுற்றில் இருந்தே திமுகதான் முன்னிலை வகித்தது. ஒட்டுமொத்த வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,23,689 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.பாமக வேட்பாளர் அன்புமணி 56,026 வாக்குகளையும் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10,130 வாக்குகளையும் பெற்றிருக்கிறார். இந்தநிலையில் அதிமுகவின் வாக்குகள் யாருக்குப் போயிருக்கின்றன?

அன்னியூர் சிவா
அன்னியூர் சிவா

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் புகழேந்தி 84,157 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் வேட்பாளர் ஷீபா ஆஸ்மி 8,216 வாக்குகள் பெற்றார். அந்தவகையில் நாம் தமிழருக்கு இரண்டாயிரம் வாக்குகள் அதிகமாகக் கிடைத்திருக்கின்றன.

பாமக, 2016 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோதே, 41,428 வாக்குகளைப் பெற்றது. தற்போது, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி அமைத்து அதனைவிட, கிட்டத்தட்ட 15000 வாக்குகள் அதிகமாகப் பெற்றிருக்கிறது. ஆனால், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தற்போது, 2021-ல் புகழேந்தி பெற்றதைவிட கிட்டத்தட்ட முப்பதாயிரம் வாக்குகள் அதிகம் பெற்றிருக்கிறார். அந்தவகையில், திமுகவுக்குத்தான் அதிமுகவின் வாக்குகள் பெரும்பாலும் போயிருக்கிறது, அதேவேளை பாமகவுக்கும் கணிசமாக வாக்குகள் சென்றிருக்கிறது என்பதே அரசியல் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com