சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் சிலர் அத்துமீறி அங்குள்ள ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் பிரியாணி கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல் வந்து பிரியாணி கேட்டுள்ளது. ஆனால் கடையில் உள்ள சாப்பாடு காலியாகி விட்டதால், சாப்பாடு இல்லை எனவும் கடையை பூட்ட போவதாகவும் கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள் எனவும், உடனடியாக சாப்பாடு தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளனர். ஆனால் கடை ஊழியர்களோ மீண்டும் சாப்பாடு இல்லை என தெரிவிக்க, ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் கடை ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் கடை ஊழியர்கள் பலருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு தையல் போடும் அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுமட்டுமின்றி கடையில் உள்ள ஏராளமான பொருட்களையும் அந்த கும்பல் சேதப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் மற்றும் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் கடை ஊழியர்களை தாக்கிய அந்த அதற்குள் கும்பல் தலைமறைவாகிவிட்டது. இதுதொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.