``தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகும் வாய்ப்புள்ளது”- பி.டி.அரசகுமார் பேச்சு

``தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகும் வாய்ப்புள்ளது”- பி.டி.அரசகுமார் பேச்சு
``தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகும் வாய்ப்புள்ளது”- பி.டி.அரசகுமார் பேச்சு
Published on

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகும் வாய்ப்புள்ளது என்றும், நாட்டின் தலைவரை தேர்வு செய்யும் இடத்தில், தேர்வாகும் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார் என்றும் உசிலம்பட்டியில் நடைபெற்ற `ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில்’ திமுக செய்தி தொடர்பு செயலாளர் பி.டி.அரசகுமார் பேசியுள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி திருமுருகன் திருக்கோவில் முன்பு, திமுக அரசின் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்திருந்தது. மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய திமுக செய்தி தொடர்பு செயலாளர் பி.டி.அரசகுமார், “முதல்வர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவிலும் உறங்காமல் பணி செய்கிறார். அவர் உறக்கத்தை தொலைப்பதன் பின்னணியில், அவருக்கென தனிப்பட்ட கவலைகள் எதுவும் இருக்கிறதென நினைக்க வேண்டும். இந்த தங்க தமிழகத்தை கடனிலிருந்து மீட்டெடுத்து, மீண்டும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உறக்கத்தை இழந்து உழைத்து வருகிறார் அவர்.

அரசியலை பொறுத்தவரை, அதிமுகவினர் அவர்களாகவே அழிந்து வருகின்றனர், அழித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை அழிக்கிற பணியை திமுக செய்யவேண்டிய அவசியமில்லை. உண்மையில் நாட்டின் பிரச்னைகளை சீர்தூக்கி பார்க்கின்ற நிலைப்பாட்டில்தான் திமுக இருக்கிறது. அதிமுக அமைச்சர்கள் அவர்கள் ஆட்சியின்போது கொள்ளையடித்து கொண்டு மட்டுமே இருந்தனர். அவர்களது கோப்புகளும் ஆளுநரிடம் தூங்குகிறது. திமுக அரசு நிறைவேற்றி கொடுத்த 16 மசோதாவையும் ஆளுநர் பார்க்கவில்லை.

நீட் தேர்வில் அதிமுக அரசு தமிழ்நாட்டுக்கு ஏன் நீட் விலக்கு வேண்டும் என்பதை உச்சநீதிமன்றத்தில் முறையாக தாக்கல் செய்திருந்தால் விலக்கு கிடைத்திருக்கும். தற்போது திமுக அரசு ஏ.கே.ராஜன் தலைமையில் கமிட்டி அமைத்து நீட் விலக்கு குறித்து முழுமையான ஆய்வு செய்து அதில் உள்ள `பிரச்சனைகள் என்ன, உயிரை விட்ட மாணவர்கள் என்ன சொன்னார்கள், உயர்ந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களும் நீட் தேர்வில் ஏன் தேர்ச்சியடைய முடியவில்லை’ என கோப்புகளை தயார் செய்து வருகிறது. இந்த மசோதா குறித்து இரண்டாவது முறையாக ஆளுநரிடம் கொடுக்கவே, அவர் தற்போது தான் அதை ஜனாதிபதியிடம் அனுப்பியுள்ளார். ஜனாதிபதி நீட் விலக்கு உத்தரவு கொடுத்தாலும், கொடுக்கவில்லை என்றாலும் சட்டத்தின் கதவுகளை தட்டி திறந்து தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பதை திமுக அரசு பெற்றுத்தரும் இதில் ஐயமில்லை.

இந்தி தெரிந்தால் இந்தியா முழுவதும் செல்லலாம் என்கிறார்கள். தமிழ்மொழி தெரிந்தவர்கள் இந்தியா முழுவதும் செல்லவில்லையா? அதற்கு உசிலம்பட்டிக்காரனே சாட்சி. உசிலம்பட்டிக்காரன் கொல்கத்தாவில் இருக்கிறான், மிஜோரியில் இருக்கிறான், நாகலாந்தில், டெல்லியில் என இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றான்! இமயமலை வரை தமிழன் வாழ்ந்திருக்கிறான். கடல் கடந்தும் வணிகம் செய்தவன் தமிழன்.

இன்று நமது முகவரியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெளியில் பார்த்தால் `பாரதியாரை பாராட்டுகிறேன், திருவள்ளுவரை பாராட்டுகிறோம், திருக்குறள் இல்லாமல் எந்த கூட்டமும் நடத்துவதில்லை’ என வாய்மொழியில் மட்டுமே கூறுகிறார்கள். அமைச்சர் பொன்முடி வடமாநில தொழிலாளர்கள் குறித்து தெரிவித்த கருத்தை புரிந்து கொள்ளாமல் அவர்களின் கொஞ்ச வாக்குகளையும் பிரிக்க பார்க்கிறார்கள்.

நம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளது, இதை இந்திய நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் தெற்கு, வடக்கு என திரும்பியுள்ள கட்சிகளை இணைத்து மொழி கடந்து மதம் கடந்து ஒன்றிணைத்து நாட்டின் தலைவரை தேர்வு செய்யும் இடத்தில், தேர்வாகும் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார்” என பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com