நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகளில் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன. அந்த வகையில் பஞ்சாப்பிலும் இதற்கான வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. எல்லாக் கட்சிகளும் கூட்டணியை உறுதி செய்து தொகுதிகளைப் பிரித்து வருகின்றன. அதேபோல், தமிழகத்திலும் பிரதான கட்சிகளுடன் இதர கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் முதல் தொகுதிப் பங்கீடாக, தி.மு.க. அணியில் இன்று இரு கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மீண்டும் ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இருகட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், ‘மக்களவைத் தேர்தலில் நவாஸ் கனி மீண்டும் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார். இந்தத் தேர்தலில் ஏணி சின்னத்தில் அவர் போட்டியிட இருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார்.
அதுபோல், திமுக கூட்டணியில் உள்ள ஈஸ்வரன் தலைமையிலான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கும், கடந்த முறை ஒதுக்கப்பட்ட நாமக்கல் தொகுதியே மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டியிடுவது யார் என்பது பற்றி கட்சியின் செயற்குழு முடிவுசெய்யும் என்று ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கடந்த முறையைப்போல, இந்தத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.