“புகார் மீது நடவடிக்கை இல்லை”-காவல்துறையை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்
தேர்தல் நாளன்று தாக்குதல் நடத்திய கே.வி.குப்பம் உதவி ஆய்வாளர் மீது புகார் அளித்து 3 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, காவல்துறையை கண்டித்து தி.மு.க, விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நாளன்று பொதுமக்கள் மீது தடியடி நடத்திய உதவி ஆய்வாளர் தேவபிரகாசம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கடந்த 3 நாட்களுக்கு முன்பு கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் காவல்துறை, உதவி ஆய்வாளர் தேவபிரகாசம் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதைக் கண்டித்து திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னாங்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 1 மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கே.வி.குப்பம் காவல்நிலைய ஆய்வாளர் முரளிதரன், தங்கள் உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து குற்றச்சாட்டுக்குள்ளான உதவி ஆய்வாளர் தேவபிரகாசம் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது.