நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. முதல்கட்டமாக தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதற்காக தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகளைப் பிரித்து வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு திருவள்ளூர் (தனி), மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, அக்கட்சி சார்பில் அந்த 4 தொகுதிகளுக்கும் இன்று (மார்ச் 22) வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி மத்திய சென்னையில் முன்னாள் எம்.எல்.ஏவான ப.பார்த்தசாரதி போட்டியிடுகிறார். அதுபோல் திருவள்ளூர் (தனி) தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பியும், கடலூரில் முன்னாள் எம்.எல்.ஏ பி.சிவக்கொழுந்துவும் போட்டியிடுகின்றனர். தஞ்சாவூரில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். விருதுநகரில் மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்தின் மகன் வி.விஜய பிரபாகர் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில்தான் பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். திமுக கூட்டணியில் இந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.