தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்தின் உடலுக்கு நடிகர் விஜய் நேற்று இரவு 10:30 மணியளவில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
விஜயகாந்த்தின் உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டிருந்து. அதன்படி இன்று காலை 6:30 மணியளவில் உடல் தீவுத்திடலில் வைக்கப்பட்டது. தொண்டர்களின் கேப்டன் கோஷத்துக்கு இடையே மெல்ல மெல்ல ஊர்ந்து தீவுத்திடல் வந்தடைந்தது விஜயகாந்த் உடல்.
மாலை 4 மணியளவில் மீண்டும் தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, 4:45 மணியளவில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மதியம் 1 மணி முதல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்துக்கு உடல் கொண்டு செல்லப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை தீவுத்திடல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், காமராஜர் சாலை, கோயம்பேடு மேம்பாலம், கோயம்பேடு, 100 அடி சாலை ஆகிய பகுதிகளில் சரக்கு வாகனங்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு வாகனங்கள் மாற்றுப்பாதைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீவுத்திடலில் பொதுமக்கள் வசதிக்காக கழிவறை வசதியும் குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் தீவுத்திடலுக்கு சென்று விஜயகாந்திற்கு இறுதிமரியாதை செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
நடிகர் விஜயகாந்த் உடலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி
அஞ்சலி செலுத்திய பின் பேசிய அவர், “திரையுலகில் தன்னுடைய புரட்சிகரமான நடிப்பால் புரட்சிக் கலைஞர் என்ற பாராட்டைப் பெற்றவர். பிரபாகரன் மீது கேப்டனுக்கு இருந்த பற்று காரணமாக கேப்டன் பிரபாகரன் என தன்னுடைய நூறாவது படத்திற்கு பெயர் வைத்து மாபெரும் வெற்றியை ஈட்டியவர். அன்றிலிருந்து தன்னுடைய ரசிகர்களால் மட்டுமின்றி ஒட்டொமொத்த தமிழ் மக்களாலும் கேப்டன் என அழைக்கப்பட்ட பெருமகன்” என தெரிவித்தார்.
எல்லாவற்றுக்கும் மனிதநேயத்துடன் செயல்பட்டவர் விஜயகாந்த். இலங்கை மக்கள் மீது கூடுதல் கரிசனம் கொண்டிருந்தவர். இலங்கை மக்கள் சார்பிலும், மலையக மக்கள் சார்பிலும் அவர் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன் - இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான்
விஜயகாந்தின் உடலுக்கு நடிரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆரம்பத்தில் நட்சத்திர அந்தஸ்து வரும்முன் எப்படி என்னுடன் பழகினாரோ அப்படித்தான் இத்தனை பெரிய நட்சத்திர அந்தஸ்து வந்த பின்னும் பழகினார். இவரிடம் எனக்கு பிடித்தது, இவரிடம் எந்த அளவு பணிவு இருக்கிறதோ அந்த அளவிற்கு நியாயமான கோபமும் இருக்கும். அந்த கோபத்தின் ரசிகன் நான்.
அதனால்தான் அவர் மக்கள் பணிக்கு வந்ததாக நான் நினைக்கிறேன். என்னை மாதிரியான ஆட்களுக்கு இப்படிப்பட்ட நேர்மையாளர்களை இழந்திருப்பது ஒருவித தனிமை தான். நல்ல நண்பருக்கு விடை கொடுத்துவிட்டு நான் செல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.
கேப்டனின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து தொடங்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு உடல் கொண்டு செல்லப்படும்.
மாலை 4.45 மணியளவில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இறுதிப் பயணத்திற்கான வாகனம் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த வாகனம் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மலர்களின் செலவை சென்னை மாநகராட்சி ஏற்கிறது.
மக்கள் வெள்ளத்தில் சென்ற கேப்டனின் இறுதி பயணக்காட்சிகள், இங்கே:
தீவுத்திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் நேரில் மரியாதை
72 குண்டுகள் முழங்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை செய்த தமிழ்நாடு அரசு.
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.