கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக் குறைபாடு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் அவரின் உடல் நிலை சீராக இருக்கிறது என்றே மருத்துவமனை தெரிவித்திருந்தது. இயற்கையாகவே சுவாசிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த நவ.29ஆம் தேதி அவரின் உடல்நிலை சீராக இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்ததுடன், ’அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து, பல்வேறு அரசியல் தலைவர்களும், அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ‘விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும்’ என்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அவரது குடும்பத்திற்கு ஆறுதலும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, அன்றே விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், எக்ஸ் வலைத்தளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘கேப்டன் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். யாரும் எவ்வித வதந்திகளையும் நம்ப தேவையில்லை. விரைவில் விஜயகாந்த் வீடு திரும்புவார்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று விஜய்காந்த் தங்கி சிகிச்சைபெற்று வரும் மியாட் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், பேரி கார்டுகளுடன் காவல்துறை பாதுகாப்பிற்கு வருகை புரிந்துள்ளதாகவும் இணையதளங்களில் செய்திகள் பரவின. இதையடுத்து, தேமுதிக பொருளாளரும், விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ”கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகுவிரைவில் கேப்டன் நல்ல உடல்நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார். யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.