கருப்பு எம்ஜிஆர், தர்மதுரை, கேப்டன் விஜயகாந்த் என்று பல பெயர்களை பெற்றுள்ள விஜயகாந்த் சொக்கத்தங்கமாகவும் போற்றப்படுகிறார். சினிமாவானால் விஜயகாந்த் அளவுக்கு சாதித்தது ஒரு சிலரே. ஆம், அவரை தேடிச்செல்லும் அத்தனை பேருக்கும் வயிறார சாப்பாடு போட்டுள்ளார் விஜயகாந்த்.
எல்லோருக்கும் சாப்பாடு போட்டதற்கான காரணத்தைச் சொன்ன விஜயகாந்த், “அகல்விளக்கு படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்கையில் சாப்பாட்டில் கை வைத்தபோது ‘ஏ கதாநாயகன் வந்துட்டான் வாங்க’ என்று கூப்பிட்டார்கள். “என்னடா சாப்பிட கூட விடமாட்டிங்கறாங்களேன்னு நினைக்கும் போது சாப்பாடு நல்லா போடணும்னு நெனச்சேன். அப்போதான் ராவுத்தர் Films கம்பெனிய ஆரம்புச்சு, எல்லாருக்கும் எல போட்டு முதமுதல்ல சாப்பாடு போட்டேன்.
நான் என்ன சாப்பிடுறனோ அதைத்தான் எல்லோரும் சாப்பிடணும். கூல்றிங்ஸ், இளநீர், சிக்கன், மட்டன் என்று நான் எதை சாப்பிட்டேனோ அதைத்தான் எல்லோரும் சாப்பிடணும் என்று கொண்டுவந்தேன்” என்று மனம் திறந்தார்.
வாய்ப்பு தேடி வருபவர்களும் சரி, விஜயகாந்தை பார்க்க வருபவர்களும் சரி ராவுத்தர் கம்பெனியில் எப்போதும் இலவசமாக சுடச்சுட சாப்பிடலாம். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்று பாடியுள்ளார் பாரதி. அப்படித்தான் தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஓடும் ரயிலையும் நிறுத்தியவர் விஜயகாந்த். நடிகர்களுடன், படக்குழுவினருடன் ரயில் பயணம் செய்தபோது, யாரும் சாப்பிடவில்லை என்று ஓடும் ரயிலை நிறுத்தி அருகாமையில் இருந்த கடைக்குச் சென்று அனைவருக்கும் உணவு பரிமாறினார் விஜயகாந்த்.
இதனை நினைவுகூர்ந்த நடிகர் சூர்யா, அவர் நினைத்தால் நடக்காதது இல்லை என்றார். அவர் நடிக்கும் படத்தில், கோழி, ஆடு, மீன் என்று அனைவரும் போதும் போதும் என்று சொல்லும்வரை அசைவம் சாப்பிடலாம். அவர் என்ன சாப்பிடுகிறாரோ அதேதான் அங்கிருக்கும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இப்படி திரைத்துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய விஜயகாந்த் கேப்டனாக போறப்படுகிறார் என்று நினைவுகூர்கிறார் நடிகர் அஜய் ரத்தினம்.
10 பேர் அல்ல 100 பேர் அல்ல, லட்சக்கணக்கானவர்களுக்கு சோறு போட்டவர் விஜயகாந்த். அதெல்லாம் விஜயகாந்த்தால் மட்டும்தான் முடியும் என்று ஒருமுறை மனம் திறந்து பேசினார் மறைந்த நடிகர் மனோபாலா.
இதுகுறித்து நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கூறுகையில், "ஒரு தாயைப்போல தன்னை கவனித்தவர் விஜயகாந்த். அவருடன் சாப்பிட வேண்டுமானால் நான்கு வயிறு வேண்டும். சாப்பிட்ட பிறகு படப்பிடிப்பில் ஷூட்டிங்கில் போய் தூங்க அனுப்புவார்” என்று நெகிழ்ச்சி தெரிவித்தார். அசைவம், சைவம் என்று எந்த வேறுபாடும் இல்லாமல், யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் சோறு போட்டு அழகுபார்த்தவர் விஜயகாந்த். இப்படி போட்ட சாப்பாடு எல்லாம் தயாரிப்பாளர் செலவில் அல்ல. அத்தனையையும் தனது சொந்த செலவில் செய்து அழகு பார்த்தார். இது குறித்து பேசிய தயாரிப்பாளர் டி.சிவா ”அனைவருக்கும் சமமான unlimited சாப்பாடு என்று சொன்னதால், படப்பிடிப்பில் சமாளிக்க முடியவில்லை.
இது அவரது காதிற்கு சென்றபோது, ஒரு படத்திற்கு சாப்பாடு செலவு 5 லட்சம் ஆகிறதென்றால். என் கணக்கில் 3 லட்சம் எழுதுங்கள். நான் தருகிறேன்” என்று தனது சொந்த செலவில் செய்ததாக நினைவு கூர்ந்துள்ளார்.
தம்வாழ்நாள் முழுக்க தன்னைச் சுற்றி இருந்த மனிதர்களுக்குச் சோறு போட்ட கேப்டனுக்கு அஞ்சலி. அவருக்கு இடும் வாய்க்கரிசி வள்ளலாருடையதும் என்று விஜயகாந்த் குறித்து பெருமிதமாக தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளார் எழுத்தாளர் சரவணன்.
லட்சக்கணக்கானவர்களுக்கு சாப்பாடு போட்டு, பலரது உயிரைக்காப்பாற்றிய விஜயகாந்த்தை அனைவருமே சொக்கத்தங்கம், தர்மதுரை என்று உச்சிமுகர்ந்து பாராட்டுகின்றனர். மண்ணுல பயணத்தை முடித்துக்கொண்டவருக்கு அனைவரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.