20-ம் ஆண்டில் தேமுதிக| விஜயகாந்தின் குதிரைப்பாய்ச்சலில் மிரண்ட அரசியல் களம்; தற்போதைய நிலை என்ன?

தேர்தல் களத்தில் பல்வேறு ஏற்ற இரக்கங்களைச் சந்தித்த கட்சி தேமுதிக. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக உயர்ந்த அந்தக் கட்சியின் தற்போதைய நிலை என்ன, அந்தக் கட்சியின் எதிர்காலம் என்ன? ஒரு சின்ன ரீவைண்ட்.
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்pt web
Published on

20ஆம் ஆண்டில் தேமுதிக

மறைந்த நடிகர் விஜயகாந்தால் தொடங்கப்பட்ட தேமுதிக இன்று இருபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2005 செப்டம்பர் 14. இதே நாளில்தான் மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் திரள் கூட்டத்தில், கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த். தேர்தல் களத்தில் பல்வேறு ஏற்ற இரக்கங்களைச் சந்தித்த கட்சி தேமுதிக. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியாக உயர்ந்த அந்தக் கட்சியின் தற்போதைய நிலை என்ன, அந்தக் கட்சியின் எதிர்காலம் என்ன? ஒரு சின்ன ரீவைண்ட்.

திரையில் புரட்சிக் கலைஞராக உருவெடுத்த விஜயகாந்த், நிஜத்திலும் ஈழம், காவிரி உள்ளிட்ட தமிழக மக்கள் நலன் சார்ந்த, உணர்வு சார்ந்த போராட்டங்களில் எப்போதும் முன்னணியில் நின்றார். 2000-ம் ஆண்டில் தன் மன்றத்துக்கென தனிக்கொடி, 2001 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி, 2002-ல் இருந்து தனது படத்தில் அதிரடி அரசியல் வசனங்கள் என அரசியல் பாதையை நோக்கி வேகமாக நகர ஆரம்பித்தார். உள்ளாட்சித் தேர்தலில் தன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் பலர் வெற்றி பெற்றது அவருக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. திருவண்ணாமலையில் கட்சி அறிவிப்பு, ஈரோட்டில் கட்சி தொடங்கும் தேதி, மாநாடு அறிவிப்பு என அதிரடி காட்டத் தொடங்கி, 2005 செப்டம்பர் 14ல் மதுரையில் தேமுதிகவைத் தொடங்கினார் விஜயகாந்த்.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் | 21 தங்கம் வென்று இந்தியா முதலிடம்! 2 தங்கம் வென்ற தமிழ்மகள்!

வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக தேமுதிக

2006 சட்டமன்றத் தேர்தல்தான் தேமுதிக சந்தித்த முதல் தேர்தல். எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் 232 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர்த்துப் போட்டியிட்ட மற்ற யாரும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால், 8.45 சதவிகித வாக்குகள் பெற்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது தேமுதிக.

தி.மு.கவின் மெகா வெற்றியைச் சிதைத்ததும் அ.தி.மு.கவின் தோல்விக்குக் காரணமாகவும் தே.மு.தி.க பெற்ற வாக்குகள் பார்க்கப்பட்டன. கிட்டத்தட்ட 100 தொகுதிகளுக்கும் மேல், வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் காரணிகளாக தே.மு.தி.கவின் வாக்குகள் இருந்தன. வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விருத்தாசலம் தொகுதியில், தி.மு.க கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் கோவிந்தசாமியைத் தோற்கடித்து முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குள் நுழைந்தார் விஜயகாந்த்.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
அப்படியா..! அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை மழையை உருவாக்க மத்திய அரசு திட்டம்!

எதிர்க்கட்சியாக தேமுதிக

தே.மு.தி.க பெற்ற வாக்கு சதவிகித்தை புரிந்துகொண்ட இரண்டு திராவிடக் கட்சிகளும், தொடர்ந்து வந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக்கு வலைவிரிக்க, பிடிகொடுக்காத தே.மு.தி.க மீண்டும் தனித்தே களம் கண்டது. விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மாபா பாண்டியராஜன் மட்டுமே ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமானவர்களாக இருக்க, 10.45 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தது. பெரும்பாலான தொகுதிகளில் 50,000-த்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர் தே.மு.தி.க வேட்பாளர்கள்.

2011 தேர்தலில், அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்து, 41 தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சிக்கு 29 சட்டமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்தும் கிடைத்தது. அதன் பிறகு, 2014 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அந்தக் கட்சி 14 இடங்களில் போட்டியிட்டு ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் ஐந்து சதவிகிதமாகக் குறைந்தது.

தொடர்ந்து, 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரானார் விஜயகாந்த். ஆனால், போட்டியிட்ட, 104 தொகுதிகளில் 103 தொகுதிகளில் அந்தக் கட்சிக்கு டெபாசிட்கூட கிடைக்கவில்லை. முதல் தேர்தலிலேயே வென்று சட்டமன்ற உறுப்பினரான விஜயகாந்த், உளுந்தூர்பேட்டையில் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். அந்தக் கட்சியின் வாக்குவங்கியும் 2.3 சதவிகிதமானது. தொடர்ந்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணியில் நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட அந்தக் கட்சி ஓர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லை. வாக்குவங்கியும் 2.2 சதவிகிதமாகக் குறைந்தது. 2021 தேர்தலில், அமமுக கூட்டணியில் அறுபது தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் ஒரு சதவிகிதத்துக்கும் கீழாகக் குறைந்தது. 2023 டிசம்பர் 28-ம் தேதி கட்சியின் பொதுச் செயலாளரான விஜயகாந்த் மரணமடைந்தார்.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
’Cream Bun’ வீடியோ.. போஸ்ட்.. டெலிட்.. ரீ போஸ்ட்.. ரீ டெலிட்.. அன்னப்பூர்ணாவுக்கு என்னதான் ஆச்சு?

விஜயகாந்த் மீதான அபிமானம் கைகொடுக்குமா?

தொடர்ந்து, 2024 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை. அதேவேளை, விருதுநகரில் போட்டியிட்ட விஜயபிரபாகரன் 4,379 என சொற்ப வாக்குகளில் தோல்வியடைந்தார். விஜயகாந்த் மரணத்தால் உண்டான அனுதாப வாக்குகளும் விஜயகாந்தின் சொந்த ஊர் அந்தத் தொகுதிக்குள் வருவதும் அதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.

விஜயகாந்த்
விஜயகாந்த்

விஜயகாந்தின் மரணத்துக்குப் பிறகு கோயம்பேட்டில் இருக்கின்ற தேமுதிக தலைமை அலுவலகம் கேப்டன் ஆலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. விஜயகாந்த் மறைந்து பல மாதங்கள் ஆனபோதும், அவரின் நினைவிடத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறையவில்லை. “கேப்டன் மறைந்து எங்கள் கட்சிக்கு உயிரூட்டியிருக்கிறார்” என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் அந்தக் கட்சியின் நிர்வாகிகள். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழ்நாட்டில் உருவெடுத்த தேமுதிக தற்போது மற்றுமொரு கட்சியாக மாறிப் போயிருக்கிறது. உணர்வுபூர்வமாக விஜயகாந்த் மீது மக்களுக்கு இருக்கும் அபிமானம் தேமுதிகவுக்கு தேர்தலில் கைகொடுக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன்
”இதுதான் கார்ப்பரேட் உலகின் உண்மைமுகம்”|பதிவுக்கு லைக்; பணிநீக்கம் செய்த நிர்வாகம்-புலம்பும் ஊழியர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com