செய்தியாளர்: சுரேஷ்குமார்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், நேற்று தாக்கப்பட்ட மருத்துவர் பாலாஜியை இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார் அவர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசிய போது...
“உண்மையிலேயே மருத்துவர் பாலாஜிக்கு நடந்திருப்பது கண்டிக்கக் கூடிய விஷயம். மருத்துவர் பாலாஜியையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்து இருக்கிறேன். இச்சம்பவம் போலவே ஸ்டான்லி மருத்துவமனையிலும் ஒரு மருத்துவரும் தாக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தாக்கப்படுவது தொடர் நிகழ்வாகவே இருந்து வருகிறது. மருத்துவர்கள் பணி சுமையின் காரணமாக பாதிக்கப்பட்டால் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மருத்துவர்கள் நோயாளிகள் என இருபுறமும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவர்களை தமிழ்நாடு அரசு பணியமர்த்த வேண்டும். நேற்றைய தினம் ஊட்டியில் அரசு மருத்துவமனை ஒன்றில் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதுதான் நிலை.
டெங்கு காய்ச்சல் அனைத்து கிராம பகுதிகளிலும் பரவி இருக்கிறது. அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்குதான் சிகிச்சைக்காக வருவார்கள். ஆனால் இன்றைய பல அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லை. மருந்துகள் இல்லை. அப்படியே இருந்தாலும் அவை தரமாக இல்லை. இதுவே தமிழகம் முழுவதும் மக்கள் சொல்லும் குறையாக உள்ளது. ரமணா படத்தில் வரும் காட்சிபோல, மக்கள் அரசு மருத்துவமனைகள் மீது பல பெரிய பெரிய குறைகளை சொல்கின்றனர். ரமணா படத்தில் நோயாளிகள் சந்திக்கின்ற அவலங்கள் இடம்பெற்றிருக்கும். 90 சதவீத மக்கள் இந்த தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இந்த மருத்துவமனைக்கு கலைஞரின் பெயரை வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு மருத்துவமனைக்கு வரக்கூடிய பொதுமக்கள் மீதும் மருத்துவர்கள் மீதும் அரசு கவனம் செலுத்த வேண்டும். பள்ளிக்குச் செல்லக் கூடிய மாணவ மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? பெற்றோர்கள், ஆசிரியர்களை நம்பிதான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் பள்ளிகளில் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்கள். திருவொற்றியூரில் பழ வியாபாரம் செய்பவர் ஒரு ரவுடியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இன்று தமிழ்நாடு முழுவதும் எல்லா இடங்களிலும் இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கின்றனர்.
இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். இதற்கு ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கவனக் குறைவுதான் காரணம். இதையெல்லாம் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது அரசின் பொறுப்பு. ஆட்சிக்கு வருவதற்காக வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு மக்களை சரியாக பாதுகாக்கவில்லை என்றால் நிச்சயமாக மக்களுடைய எதிர்ப்பை இந்த ஆட்சி சந்திக்கும். 75 ஆண்டு கால ஆட்சியில் இருக்கிறோம் என பெருமை பேசும் திமுக, ஆட்சிக்கு வரும்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளது.
போராட்டம் நடத்தி வரும் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இங்கு கட்டடம் பெரிதாக இருக்கிறது. ஆனால், மருத்துவமனையில் இருக்கக் கூடிய உபகரணங்கள் உடைந்து இருக்கிறது. பாதிப்பு ஏற்பட்ட பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீசாரின் பாதுகாப்பை கொடுப்பதற்கு பதில் அனைத்து இடங்களிலுமே முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு கட்டமைப்புகளை உறுதிப்படுத்துவதே தமிழ்நாடு அரசின் கடமை” என்று தெரிவித்தார்.