பறை இசை இசைப்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என கர்நாடக இசை கலைஞர் டி.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
சென்னை- கோடம்பாக்கத்தில் 'குறளோடு பறையோடு' என்ற காணொளி திரையிடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், டி.எம்.கிருஷ்ணா கலந்து கொண்டு பேசினார். அப்போது, திருவள்ளுவரை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு சமகால அரசியல் சூழல் இருப்பதாக அவர் கூறினார்.
திருக்குறளின் பொருளை பறிக்க முயற்சிகள் நடப்பதாகவும், சாதி, மத பாகுபாடின்றி அனைவரிடமும் திருக்குறளை கொண்டு செல்ல வேண்டும் என்றும் டி.எம். கிருஷ்ணா குறிப்பிட்டார். மேலும், எல்லோருக்கும் கர்நாடக சங்கீதம் வராது என்கிற பேச்சு உள்ளது. என் பாட்டை கேட்காதவர்கள் கூட எனக்கு மரியாதை கொடுக்கிறார்கள், ஆனால் பறை இசை இசைப்பவர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் பறை என்பது அழகியல் இசை கருவி என்று புகழ்ந்த டி.எம்.கிருஷ்ணா, சர்வதேச அளவில் தமிழர்களின் அடையாளமாக பறை இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.