சேலத்தில் தரமற்ற இனிப்புகளை தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்குவதை யொட்டி புத்தாடைகள், இனிப்பு வகைகள், பட்டாசுகள் விற்பனை களை கட்டத் துவங்கியுள்ளது. இந்த நிலையில் சேலத்தில் பாதுகாப்பான இனிப்பு மற்றும் காரம் தயாரிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
சேலம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் கத்திரவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு தயாரிப்பு மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் தரமான இனிப்பு வகைகளை தயாரிப்பது எப்படி? சுவை மற்றும் நிறத்திற்காக பயன்படுத்தப்படும் எந்தெந்த பொருட்களில் நச்சுத்தன்மை உள்ளது என்பன உள்ளிட்ட விவரங்கள் எடுத்துரைக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கதிரவன் பேசும்போது...
தீபாவளி பண்டிகையை ஒட்டி கடைகளை உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கிப்ட் பாக்ஸ்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்டவைகள் கட்டாயம் இருக்க வேண்டும். திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய இடங்களில் இனிப்பு பலகாரங்கள் செய்யும்போது தரமானதாக தயாரிக்கப்பட வேண்டும். குறிப்பாக லேபிள் ஒட்டி விற்க வேண்டும் என்று தெரிவித்தவர் தொடர்ந்து:...
லைசன்ஸ் இல்லாமல் பொருட்களை தயாரிக்கக் கூடாது. இல்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். இனிப்பு மற்றும் கார வகைகளில் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அனுமதிக்கப்பட்ட அளவை விட செயற்கை நிறமிகளை சரியான அளவு சேர்க்க வேண்டும் அதிகம் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்..
தீபாவளி பண்டிகையையொட்டி விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் உணவு தரத்தை கண்காணிக்க 10 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறி தரமற்ற இனிப்பு வகைகளை தயாரிப்போர் மீது உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.