கொரோனா இரண்டாம் கட்ட பரவல் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரபடுத்தியுள்ளது.
>>>மதுரையில் முகக்கவசம் அணியாமல் இருந்த அரசு பேருந்து ஓட்டுனர், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகள், வாகன ஓட்டிகள், உணவக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் அபராதமாக 200 ரூபாய் வசூல் செய்யப்பட்டது. இதுவரை முகக்கவசம் அணியாத 1521 நபர்களிடமிருந்து 3,04,200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
>>>கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை எதிரொலியாக சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கடும் கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் போடமால் சென்றால் அபராதமும், தமிழக கேரளா எல்கையில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருபவர்கள் இபாஸ் எடுக்க வேண்டும் என்றும், இல்லையேல் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் வெளியில் இருந்து வரும் பயணிகளை கொரோனா பரிசோதனைக்கு பிறகுதான் தமிழகத்திற்குள் அனுமதித்தும் வருகின்றனர்.
>>>மயிலாடுதுறை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் ரூபாய் 200 அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
>>>புதுக்கோட்டை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு விதிமுறை மீறல்கள் தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் மூலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.10 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்படுவதுடன், முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள், திரையரங்குகள், கடைகள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கடை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும். இதனை மீறும் கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
>>>நாமக்கல் மாவட்டத்தில் கடைகள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கவும், கடைக்கு உள்ளே முகக்கவசம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் கண்டறியப்பட்டால் கடை உரிமையாளருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கொரோனா நோய் பரவல் காரணமாக முகக்கவசம் அணியாதவர்களிடம் நகராட்சி நிர்வாகம் 200 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
>>>தருமபுரி சார் ஆட்சியர் மு.பிரதாப் கடைகளில் பொதுமக்கள் வரும்பொழுது கைகளுக்கு கிருமிநாசினி தெளித்தல், முக கவசம் அணிந்து வருதலை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், அவ்வாறு பின்பற்றவில்லை என்றால், கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். அதன்படி தருமபுாி நான்குரோடில் முகக்கவசம் அணியாமல் சென்றவா்களிடம் காவல்துறையினா் 200 ரூபாய் அபாரதம் வசூலித்தனா்.
>>>ஓமலூர் பேரூராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களிடம் 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஓமலூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து திடீரென அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதால் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
>>>ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒருநாள் மட்டும் முககவசம் அணியாத 2000 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் தேவையான கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளதாகவும், எனவே மக்கள் தயக்கமின்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.
>>>தஞ்சை மாவட்டம் திருவையாறில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது.
>>>சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
>>>கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியில் உள்ள பிரதான சோதனைச் சாவடியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ பாஸ் மற்றும் கொரானா சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளைக் கடைபிடிக்காத நபர்களை கண்காணிக்க காவல்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக, இரவு நேர ஊரடங்கு, மாஸ்க் அணியாவிட்டால் 100 ரூபாய் அபராதம் உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் பயணிகளை அழைத்துச் சென்றால் பேருந்துக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கடலூரில் நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாஸ்க் அணியாத பயணிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.