பறிமுதல் செய்த கள்ள நோட்டுகளை பதுக்கிய சப் இன்ஸ்பெக்டர் - பாய்ந்தது நடவடிக்கை!
மதுரையில் கள்ள நோட்டு கும்பலிடம் பறிமுதல் செய்த கள்ள நோட்டை பதுக்கிய தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் புறநகர் காவல் நிலைய தனிப்பிரிவு சார்பு காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஆனந்த். இவர் கடந்த 2020-ம் ஆண்டு திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சார்பு காவல் ஆய்வாளராக பணியாற்றிய நிலையில், அப்போது மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில் அவ்வழியே வந்த 2 கார்களை சோதனை செய்ததில், அதில் 3 மூட்டைகளில் கள்ள நோட்டுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு மூட்டையில் 100 ரூபாய் நோட்டுக்களும், மற்றொரு மூட்டையில் 500 ரூபாய் நோட்டுகளும் ,மற்றொரு மூட்டையில் 2000 ரூபாய் கள்ள நோட்டுகளும் சுமார் 80 லட்சம் ரூபாய்க்காண கள்ள நோட்டுகள் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதனை கடத்தி வந்த நபர்கள் 10 பேரையும் கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டுகளை முழுமையாக நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை சட்டவிரோதமாக தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஆனந்த் தனக்கு சொந்தமான இடத்தில் பதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக தென் மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க்கிடம் ரகசிய புகார் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐஜி அஸ்ரா கார்க் பரிந்துரையின்பேரில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் அடிப்படையில் கள்ளிக்குடியில் உள்ள தனிப்பிரிவு சார்பு காவல் ஆய்வாளர் ஆனந்திற்கு சொந்தமான இடத்தில் அதிரடியாக சோதனை நடத்திய காவல்துறையினர் அங்கிருந்த இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், சார்பு ஆய்வாளர் ஆனந்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.