கரூர் மாவட்டம், தென்னிலை முதல் கூனம்பட்டி கரைத்தோட்டம் வரை உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தென்னிலை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.
இந்த நிலையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய ராஜாவிடம், ஆட்சியர் “அரசின் கொள்கை முடிவாக உள்ள இந்த திட்டத்திற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்காதபோது, நீங்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றீர்கள். வருவாய்த் துறையில் பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் தலையிடுவதாக பொதுமக்களிடமிருந்து உங்கள் மீது புகார் வருகிறது. புகார்களின் பெயரில் உங்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள முடியும்” என பேசியுள்ளார்.
விவசாயி ராஜா, மாவட்ட ஆட்சியருடன் பேசிய இந்த உரையாடல் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தான் பேசிய செல்போன் உரையாடல் பதிவு செய்யப்பட்டு, பரப்பப்படுவதை அறிந்த மாவட்ட ஆட்சியர் தற்போது தன் பேச்சுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் அவர் “புகார்களின் பேரில் அவரை குண்டர் சட்டம் மூலம் கைது செய்ய எனக்கு அதிகாரம் உள்ளது. அதனாலேயே கூறினேன். இதில் என் ஆடியோவை பதிவேற்றுவதால் எனக்கு கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.