கர்நாடகா கட்டிய தடுப்பணை: நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும்- அமைச்சர் துரைமுருகன்

கர்நாடகா கட்டிய தடுப்பணை: நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும்- அமைச்சர் துரைமுருகன்
கர்நாடகா கட்டிய தடுப்பணை: நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும்- அமைச்சர் துரைமுருகன்
Published on

தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டியுள்ளதால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் நாச்சியாகுப்பம் கிராமத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கர்நாடக காப்புக்காட்டு பகுதியில் யார்கோள் என்ற இடத்தில் 1892-ஆம் ஆண்டு நதிநீர் ஒப்பந்தத்தை மீறி பெரிய தடுப்பணையை கர்நாடக அரசு கட்டியுள்ளது. 50 மீட்டர் உயரமும், 430 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய தடுப்பணை கட்டப்பட்டுள்ளதால் தென்பெண்ணை ஆற்றுக்கே தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும். இதனால் தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயம் மற்றும் குடிநீருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

முன்னதாக, மார்க்கண்டேய நதி குறுக்கே அணை கட்டக்கூடாது என கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் ஜல்சக்தி அபியான் மூலம் தீர்வு காணுமாறு கடந்த 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. கடந்த 2020ஆம் ஆண்டு ஜல்சக்தி அபியான் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதன் பிறகு கொரோனா தொற்றால் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில், கொரோனா பொதுமுடக்கம், தமிழக தேர்தல் உள்ளிட்ட சூழலை பயன்படுத்தி யாரும் கவனிக்காத நேரத்தில் கர்நாடகா அணை கட்டியுள்ளது.

இந்த அணையால் கிருஷ்ணகிரியில் 870 ஹெக்டேர் பாசனம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த தடுப்பணை விவகாரத்தில் நடுவர் மன்றம் மூலம் தீர்வு காணப்படும் என்றும் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com