புதுக்கோட்டையில் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் குப்பையிலிருந்து கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆண்டவராயபுரம் கிராம மக்கள், கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை அவர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படவில்லை.
இந்நிலையில், பழனிவேல் என்பவரது தோட்டத்தில் குப்பை கூளங்களுக்கு இடையே மருத்துவ காப்பீடு அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்தனையும் அந்த கிராம மக்களின் மருத்துவ காப்பீடு அட்டைகள் எனத் தெரிகிறது. மண்ணில் புதைந்த நிலையில் உள்ள அட்டைகளை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், கடந்த 9 ஆண்டுகளாக காப்பீடு அட்டையின்றி 3 உயிர்கள் பறிபோனதாகவும், பல குடும்பங்கள் பல லட்சம் ரூபாய் கடன்பட்டு மருத்துவ செலவை மேற்கொண்டதாகவும் வேதனை தெரிவித்தனர். காப்பீடு அட்டைகளை குப்பையில் வீசிச் சென்ற அதிகாரிகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.