அரசு விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு: எச்சரித்த நீதிமன்றம்

அரசு விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு: எச்சரித்த நீதிமன்றம்
அரசு விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு: எச்சரித்த நீதிமன்றம்
Published on

அரசு பொது விடுமுறை நாட்களை டாஸ்மாக் மதுபான விற்பனை இல்லாத நாட்களாக அறிவிக்கக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் எச்சரிக்கையை அடுத்து, வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தூத்துக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் விடுமுறை நாட்கள் குறித்து தலைமை செயலாளர் வெளியிடும் அட்டவணையில் புத்தாண்டு, பொங்கல், மாட்டுப் பொங்கல், தைப்பூசம், குடியரசு தினம், மொகரம், பக்ரீத், ரம்ஜான், புனித வெள்ளி, கிறிஸ்துமஸ், தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மே தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு ஆகியவை உள்ளன. இந்த விடுமுறைகள் அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் போன்ற அனைத்து தமிழக அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பொருந்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனையகங்களுக்கு, விடுமுறை விடாமல் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபடுவதாக வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் ஒவ்வொரு ஆங்கில மாதம் முதல் தேதியன்று மது விற்பனை கிடையாது என்றும், பெரும்பாலான பண்டிகை தினங்களில் மது விற்பனை கிடையாது என்றும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ள வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து பண்டிகை நாட்களிலும் மது விற்பனை கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலங்களில் வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடவே விடுமுறை விடப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் பண்டிகை தினத்தில் மது அருந்தி நிறைய விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது என்றும், சந்தோசமாக இருக்க வேண்டிய இல்லம் துக்க வீடாக மாறுகிறது என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழக அரசு அறிவித்துள்ள பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் விடுமுறை அளித்து மது விற்பனை இல்லா நாட்களாக அறிவிக்க வேண்டுமென மனுவில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பாண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் விற்பனையகங்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டப்படிதான் வரும் என்றும், அரசு பொது விடுமுறை நாட்களில் கட்டுப்படாது என தெரிவித்தனர்.

மேலும் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடர்வது குறித்து உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொதுநல வழக்குகள் இல்லாமல், வழக்காடிகளுக்காக எத்தனை வழக்கு தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர். பார் கவுன்சில் பதிவை ரத்து செய்யவும் உத்தரவிடக்கூடும் என்று எச்சரித்த நீதிபதிகள், விளம்பரத்திற்காக வழக்கு தொடர்ந்துள்ளதால் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் கூறினர். இதையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com