சாட்டை துரைமுருகன் மீதான வழக்கு ரத்து? நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம்.. நடப்பது என்ன?

சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவிட மாட்டேன் என நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளார். என்ன நடந்தது விரிவாகப் பார்ப்போம்..
சாட்டை துரைமுருகன்
சாட்டை துரைமுருகன்PT
Published on

என்ன நடந்தது?

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சாட்டை துரைமுருகன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பாடல் ஒன்றை பாடினார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. அதுதொடர்பாக திமுக ஐடி விங் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், திருச்சி சைபர் கிரைம் போலீஸார், பொது அமைதியை சீர்குலைத்தல், கலவரத்தை தூண்டுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வைத்து தனிப்படை போலீஸார் துரைமுருகனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகனிடம் 3 மணி நேரத்துக்கு மேல் போலீஸார் விசாரணை நடத்தினர்.

பின்னர் திருச்சி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் துரைமுருகன் ஆஜர்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்டை துரைமுருகனை கைது செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று தெரிவித்ததோடு, அவரை நீதிமன்றக் காவலில் வைக்க தேவையில்லை என்று கூறி விடுவித்தார்.

சாட்டை துரைமுருகன்
அறிமுக ஒலிம்பிக்கிலேயே வெண்கலம்.. இந்தியாவிற்கு 3வது பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே! அரிதான சாதனை!

தொடர்ந்து, பத்திரிகையாளர்களைச் சந்தித்த சாட்டை துரைமுருகன், ``என்னை திட்டமிட்டு இந்த அரசு கொலை செய்ய பார்க்கிறது. அரசிடம் எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. நீதிமன்றம் எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்’’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, ``நாம் தமிழர் கட்சி தொடங்கிய இந்த 14 ஆண்டுகளில் பட்டியலின மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும்தான் அரசியல் செய்கிறோம். எனது யூடியூப் சேனல்களில் பெரும்பாலான வீடியோக்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் வலிகளையும் வேதனைகளையும் பிரதிபலிப்பதாகவே இருக்கும்.

குறிப்பாக வேங்கைவயல், மேல்பாதி, சங்கரன்கோயில் ஜாதிய பிரச்னை, நாங்குநேரி சாதிய பிரச்சினை ஆகிய பிரச்சினைகளில் அந்த சமூக மக்களுக்கு ஆதரவாக நின்றிருக்கிறேன். ஆனால் என்னை எஸ்சி எஸ்டி எனும் சட்டத்தில் முடக்க பார்த்தார்கள். நான் விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் பாடிய பாடல் அதிமுகவின் தேர்தல் பிரச்சாரங்களில் 31 ஆண்டுகளாக பாடப்பட்டு வருகிறது’’ எனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

தவிர, இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றையும் அளித்திருந்தார். அது விசாரணைக்கு வந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவிட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அதனடிப்படையில் இன்று தாக்கல் செய்துள்ளார் சாட்டை துரைமுருகன்.

சாட்டை துரைமுருகன்
3வது ஒலிம்பிக் பதக்கத்திற்கு இரண்டு அடிகளே மீதம்.. யாரும் படைக்காத சாதனையை நோக்கி பிவி சிந்து!

இதுகுறித்து கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது..

``சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் மீது வழக்குப் பதிவு செய்திருந்தார்கள். அந்தப் பிரிவுக்கு முன்ஜாமீன் கூட வாங்க முடியாது. இந்தநிலையில், வழக்கை ரத்து செய்ய மனுத்தாக்கல் செய்திருந்தோம். நீதிபதியின் உத்தரவின்பேரில் இன்று இனி இப்படிப் பேச மாட்டேன் என பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்துவிட்டோம். இந்த வழக்கு விரைவில் ரத்து செய்யப்படும்’’ என்றனர்.

இதற்கு முன்பாகவும் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் நடிகை குஷ்பு குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், யார் குறித்தும் அவதூறு பரப்பக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். அடுத்த சில நாள்களில், முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசியதாக வழங்கிய ஜாமீனை ஐகோட் மதுரை கிளை ரத்து செய்தது. அதனை எதிர்த்து சாட்டை துரைமுருகன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாட்டை துரைமுருகன்
‘டிக்கெட் சேகரிப்பவர் to இந்தியாவின் ஹீரோ..’ தோனியை போலவே வாழ்க்கையை கடந்த ஸ்வப்னில் குசலே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com