நாகை அருகே குழந்தை பிறந்த பின்பு மாற்று திறனாளி பெண்ணை ஏமாற்றிய காதலன் தலைமறைவாகியுள்ளார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் வீரபெருமாநல்லூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகள் தீனா. மாற்று திறனாளி பெண்ணான இவர் அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு தீனா கர்ப்பமாக இருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து தீனாவின் பெற்றோர் ஐயப்பனின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்துகொள்ள முறையிட்டுள்ளனர். ஆனால் தீனாவை திருமணம் செய்துகொள்ள ஐயப்பன் மறுத்துள்ளார்.
இதனால் அவர் மீது நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தீனாவின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த விவகாரத்தில் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய பாதிக்கபட்ட பெண் தீனா பெற்ற குழந்தையுடன் காதலன் ஐய்யப்பன் வீட்டு வாசலில் 100க்கும் மேற்பட்ட கிராம மக்களோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தீனா, “ஐயப்பனின் உறவினர்கள் 3 பேர் காவல் துறையில் பணிபுரிவதால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் நான் மாற்று சாதி என்பதாலும், மாற்று திறனாளி என்பதாலும் ஐயப்பன் என்னை திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார்” எனக் கூறியுள்ளார். எனவே, வீட்டை பூட்டிவிட்டு தலை மறைவாக இருக்கும் ஐயப்பன் மற்றும் அவரது பெற்றோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பாதிக்கபட்ட பெண் தீனா பெற்ற குழந்தையுடன் காதலன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.