மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எவ்வளவு உதவித் தொகை வழங்கப்படுகிறது, எவ்வளவு உயர்த்தப்படுகிறது என்பதை தற்போது காணலாம்.
தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித் தொகை தமிழக அரசினால் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளியில் 3 பிரிவாகவும், கல்லூரியில் 2 பிரிவாகவும் உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வரும் சூழலில், அவை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்விக்கு வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய் உதவித் தொகை, 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை 6 ஆயிரம் ரூபாயாகவும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான 4 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை 8 ஆயிரம் ரூபாயவும் உயர்த்தி வழங்கப்பட உள்ளது. அதேபோல, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும் மாற்றுத்திறனாளிகள் பயன் பெறும் வகையில் வழங்கப்பட்டு வந்த 6 ஆயிரம் ரூபாய், 12 ஆயிரம் ரூபாயாகவும், பட்டமேல் படிப்புக்கு 7 ஆயிரம் ரூபாயில் இருந்து 14 ஆயிரம் ரூபாயாகவும் உதவித் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளி மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது என்பதை உறுதி செய்யும் விதமாக உதவித் தொகையை உயர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பை செயல்படுத்த ஏதுவாக 14 கோடியே 90 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளார். அத்துடன் ஆராய்ச்சி படிப்பிலும் மாற்றுத் திறனாளிகள் தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்கில், 50 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் உதவித் தொகை வழங்க ஏதுவாக 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.