லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
எஸ்.பி.வேலுமணிக்கு தொடர்புடைய 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனைகள் முடிவடைந்த நிலையில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உடன் இருந்தார்.
இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசினர். அப்போது முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். இச்சந்திப்புகளின்போது, லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
ஏற்கெனவே எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திய நிலையில், எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக சார்பில் விரைவில் போராட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.