சமீபத்தில் ஓடிடியில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் மத உணர்வுகளை புண்படுத்துவதாக கோரி ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டநிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் வெற்றிமாறன் தனது கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் நயன்தாராவின் 75 ஆவது திரைப்படமான ‘அன்னப்பூரணி’ திரையரங்குகளில் வெளியானது. இதில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வெளியான நேரத்தில் கலவையான விமர்சனங்கள் வந்தன. ஆனால், சர்ச்சைகள் ஏதும் கிளம்பவில்லை.
அதனை தொடர்ந்து, சமீபத்தில் ஓடிடியில் வெளியான இத்திரைப்படத்திற்கு சில தரப்பினரால் எதிர்ப்புகள் கிளம்பியது. அது நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினருக்கு எதிரான காவல்நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்கு சென்றது.
இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி சிலர் சர்ச்சையை கிளப்பிய நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக அன்னப்பூரணி படம் நீக்கப்பட்டது.
இந்நிலையில் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் இருந்து 'அன்னபூரணி' திரைப்படம் நீக்கப்பட்டது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “ சென்சார் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் உள்ள எந்தமொழி திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது OTTக்கும் பொருந்தும்.
ஆனால் தணிக்கைக் குழு (CBFC) அனுமதி வழங்கிய ஒரு படத்தை புறக்காரணங்களால் OTT தளத்தில் இருந்து நீக்கம் செய்வது திரைத்துறைக்கு நல்லதல்ல. ஒரு படத்தை மக்களின் பார்வைக்கு அனுமதி வழங்குவதும், அனுமதிக்காமல் போவதும் தணிக்கைக்குழுவின் அதிகாரம். ஆகவே OTT-ன் இந்த செயல்பாடு தணிக்கைக்குழுவின் அதிகாரத்திற்கே மிகப்பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக சங்கீத பாடரும், சமூக செயல்பாட்டாளருமான டி.எம்.கிருஷ்ணா The Quint-க்கு அளித்துள்ள பேட்டியில், “பிராமண சமுதாயத்தில் இருப்பவர்களும் இறைச்சி உண்கிறார்கள், மாட்டிறைச்சி உட்பட. என்ன இதெல்லாம் முட்டாள் தனமாக இருக்கிறது (படத்தை தடை செய்வது). எந்த வகையான தடையின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எனக்கு உடன்பாடு இல்லாத கருத்துக்களாக இருந்தாலும். எந்தவொன்றும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும் என்று நான் கருதவில்லை. லிபரல்ஸ் கூட இதே தவறை செய்கிறார்கள். நாம் கூட அதே தவறை மற்றொரு புறத்தில் செய்து கொண்டிருக்கலாம். நமக்கு ஒன்று பிடிக்கவில்லை என்பதற்காக ஒன்றை தடை செய்ய சொல்லக் கூடாது. எந்தவொன்றையும் கேள்வி கேட்க வேண்டும், விவாதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையா. அதில் தவறில்லை. உங்கள் கருத்துக்காக சண்டையிடுங்கள். இதில் அச்சுறுத்தலுக்கோ, தடை செய்ய வேண்டும் என்பதற்கே இடமில்லை. அப்படியில்லை என்றால் அது நாகரீக சமூகமே கிடையாது.
விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அமெரிக்காவில் இருந்து நிறைய நிதி கிடைக்கிறது. அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான பிராமணர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரும் வெறும் சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா?. அவர்களை யார் கேலி செய்கிறார்கள். அவர்களிடம் இருந்து விஷ்வ ஹிந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ் நிதி வாங்குவதை நிறுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் வெறும் சைவம் தான் சாப்பிடுகிறார்கள் என அறிவிக்க சொல்ல வேண்டும்” என்று காட்டமாக பேசியுள்ளார்.
முன்னதாக இத்திரைப்படம் இந்து மத உணர்வுகளை புன்படுத்துவதாக உள்ளது என்று மும்பையை சேர்ந்த, சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதனால் இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது என்பதும் , திரையரங்குகளில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஓடிய திரைப்படம் ஓடிடி தளத்தில் வந்தபோது பல எதிர்ப்புகளுக்கு ஆளானது என்பது குறிப்பிடதக்கது.