நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வேலைகள் வேகம்பிடித்து வருகின்றன. முதல்கட்டமாக தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இங்கு நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. அதற்காக தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீடுகளைப் பிரித்துவருகின்றன.
இந்த நிலையில், பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, அதற்கான வேட்பாளர் பட்டியலையும் பாமக இன்று அறிவித்தது.
அதில் பாமக சார்பில் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான் கடலூர் தொகுதியில் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பாமக சார்பில் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டிருந்தது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே தங்கர் பச்சான் போட்டியிட மறுப்பதாகவும், தன்னிடம் கேட்காமலேயே அறிவித்திருப்பதாகவும், ‘கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு?’ எனக் கேள்வியெழுப்பியதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், இதற்கு தங்கர் பச்சான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ”கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.