“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்

“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்
“அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை” - பா.இரஞ்சித்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடுகொண்டபள்ளியை சேர்ந்தவர் நத்திஷ். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் சுவாதி. இருவரும் ஒருவரையொருவர் மனதார காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன் நத்திஷ் மற்றும் சுவாதி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்திலுள்ள மலவள்ளி அருகே சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் கொலைசெய்யப்பட்ட அழுகிய நிலையில் இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. கர்நாடக போலீசார் விசாரணையில் சில நாட்களுக்கு முன்பே காதல் தம்பதியினர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்தனர். பின் காதல் ஜோடி நத்திஷ்; சுவாதி ஆகியோர் பெண்ணின் தந்தை சீனிவாசன், சித்தப்பா வெங்கடேஷ் மற்றும் உறவினர் கிருஷணன் ஆகிய மூன்று பேர்களும் சேர்ந்து கடத்தி சென்று இவர்களை ஆணவ படுகொலை செய்துள்ளனர் என கண்டறிந்தனர்.

இந்தச் சம்பவம் ஒசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின் மூன்று பேரையும் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மற்றும் ஆணவப்படுகொலையை எதிர்த்து குரல் கொடுக்கும் கௌசல்யா ஆகிய மூவரும் இன்று பாதிக்கப்பட்ட நந்திஷ் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறச் சென்றனர். 

பின் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “இந்தக் கொலை மிகவும் கண்டிக்கதக்கது. இதுபோன்ற கொலைகள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருக்க ஆவணப் படுகொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். தூக்குத்  தண்டனையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்றாலும் இந்த விஷயத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மகனை இழந்து வாடும் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் “தமிழ்ச் சமூகத்தை ஜாதி என்ற கட்டுக்குள் கொண்டு வருவது வேதனை அளிக்கிறது. ஏதோ ஒரு கொலை என்று இந்த ஆணவப் படுகொலைகளை நாம் கடந்து செல்ல முடியாது. ஆனால் இதை அப்படித்தான் கடந்து சென்று விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது.

ஆடு, மாடு, நாய் போன்றவற்றை தன்னுடைய பிள்ளையாக நினைத்து வளர்க்கும் மனிதர்கள் அவர்களோடு வாழ்பவர்களை ஜாதி பார்ப்பது ஏன்” எனக் கேள்வி எழுப்பினார்.  இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

மேலும்  “அரசு மீதும் சட்டங்கள் மீதும் நம்பிக்கை இல்லை. மக்களைதான் நம்பி உள்ளோம். மக்கள்தான் ஜல்லிக்கட்டுக்காகவும் காவேரி நீராகவும் போராட்டம் கண்டு வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக மக்களை நம்பி உள்ளோம். அவர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி போராட வேண்டும். இல்லை எனில் வீசும் காற்றில் விஷம் பரவதான் செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com