தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ் தயாரிப்பாளர்கள் கையில் வர வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
சென்னையில் இன்று திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் இணைந்து ஆலோசனை நடத்தினர். இதில் பங்கேற்ற பாரதிராஜா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பாரதிராஜா, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும் என கூறினார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தமிழ் தயாரிப்பாளர்கள் கையில் வர வேண்டும் எனவும், இந்த பிரச்னையை தமிழக அரசிடம் கொண்டு செல்ல இருப்பதாகவும் பாரதிராஜா கூறினார்.
நடிகர் ராதாரவி பேசும் போது, பெரிய திரைப்படங்கள் 200க்கும் அதிகமான திரையரங்குகளில் மட்டுமே ரிலீஸாகும் என கூறிவிட்டு தன்னுடைய திரைப்படத்தை மட்டும் 300க்கும் அதிகமான திரையங்குகளில் வெளியிட விஷால் ஏன் அனுமதி அளித்தார் என கேள்வி எழுப்பினார். தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷாலையே, வேறு ஒரு தயாரிப்பாளர் கட்டுப்படுத்துகிறாரா? என்றும் அவர் வினவியுள்ளார்.
அடுத்து பேசிய டி.ராஜேந்தர், திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதாகவும் குற்றம்சாட்டினார். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்த 7 கோடி ரூபாய் வைப்புத்தொகை எங்கே என்றும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் க்யூப் கட்டணம் குறைந்துவிட்டதா என்றும் கேள்வி எழுப்பினார். 300 திரையரங்குகளுக்கு மேல் இரும்புத்திரை படத்தை வெளியிட்டது ஏன் என விஷாலுக்கு டி.ராஜேந்தர் வினவியுள்ளார்.