தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவின்போது இயக்குநரும், திரைப்பட நடிகருமான டி.ராஜேந்தர் மயங்கிவிழுந்தார்.
மழை, வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியலை மறந்து வேறொரு வாழ்க்கை வாழ்கிறேன். எனது மகன் சிலம்பரசன் ரசிகர் மன்றம் மற்றும் டி.ஆர்.மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளோம்.” என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகரில் லெவிஞ்சிபுரம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டி.ராஜேந்தர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது டி. ராஜேந்தர் மயங்கி விழுந்ததால் அவரது ரசிகர் மன்றத்தினர் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.
தொடர்ந்து மயக்கமுற்ற டி. ராஜேந்தர் முகத்தில் தண்ணீர் தெளித்து, அவரை மயக்கத்திலிருந்து மீட்டனர். இதனால் நலத்திட்ட உதவிகள் வழங்குவதை பாதியிலேயே முடித்துக் கொண்டு டி.ராஜேந்தர் புறப்பட்டுச் சென்றார். காத்திருந்த பொதுமக்களுக்கு ரசிகர் மன்றத்தினர் நலத்திட்ட பொருட்களை வழங்கினர்.