கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் ஃபிரெண்ட்ஸ் ஃபெடரேசன் அமைப்பின் 33 ஆம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற தாம்பரம் சரக காவல்துறை தலைவர் ரவி, திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் அமீர், “அண்ணாமலையை மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு தலைவராக நான் பார்க்கவில்லை. அவர், பாஜகவில் இருக்கிறார் என்பதனால் நான் இதை சொல்லவில்லை. காங்கிரஸில் அவர் இருந்திருந்தாலும், இப்படித்தான் சொல்வேன். ‘பெருமைமிக்க கன்னடர்’ என கூறிக் கொண்ட அவர், தமிழகத்தில் திடீரென்று அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று கூறி வருகிறார்.
ஊழல் பட்டியலில் வெளியிடுவேன் என்றவர், இப்போது சொத்துப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
காவல் துறையில் பணியாற்றியதால் நிறைய கிரிமினல்களை பார்த்திருப்பார். எனவே இப்போதும் கிரிமினல் மனப்பான்மையில் உள்ளார்.
இயக்குநர் அமீர்
அவர் எந்த காலத்திலும் நேர்மையாக அரசியல் செய்ய மாட்டார். அதேபோல அவரை எந்த காலத்திலும் தமிழகத்தின் மீதோ, தமிழ் மொழியின் - தமிழ்தாய் வாழ்த்தின் மீதோ அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை” என்றார்.