நிலக்கோட்டை அருகே போலீஸார் விரட்டி சென்ற போது தவறி விழுந்து பலியான டிரைவரின் உறவினர்கள், விரட்டிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க புகார் கொடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ளது சித்தர்கள் நத்தம் கிராமம். இங்கு வசித்து வருபவர் மீனா. இவர் காங்கிரஸ் கட்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளராக உள்ளார். மீனாவுக்கு சொந்தமான சரக்கு வேன் டிரைவராக, சித்தர்கள் நத்தத்தை சேர்ந்த முத்துபாண்டி வேலை பார்த்து வந்தார். கடந்த வாரம் சித்தர்கள் நத்தம் அருகே கிராம நிர்வாக அலுவலர் கணேஷ்குமார், உதவியாளர் அழகு மலை, கிராம வருவாய் ஆய்வாளர் சரவணமுத்து ஆகியோர் மீது சரக்கு வேனை ஏற்றி கொல்ல முயன்றதாக மீனா மற்றும் முத்துபாண்டி மீது நிலக்கோட்டை காவல்நிலையத்தில் பொய்யான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக மீனா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடந்த 13ந்தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிரைவர் முத்துபாண்டியை காவலர்கள் பிடிக்க முற்பட்டனர். அவர்களிடம் இருந்து தப்பிய முத்துபாண்டி, அங்கிருந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்பொழுது நிலை தடுமாறிய முத்துபாண்டி பள்ளத்தில் விழுந்த முத்துப்பாண்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து முத்துபாண்டியின் பிரேதத்தை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முத்துபாண்டியின் தந்தை பிச்சைராஜா மற்றும் உறவினர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கும் வரை பிரேத்தை வாங்க போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.